எதிர்வரும் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரை முன்னிட்டு, ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையாருக்கு இலங்கை தமிழ் அரசு கட்சியின் முன்னெடுப்பில் ஆவணமொன்று அனுப்பி வைக்கப்படவுள்ளது.
ஏற்கனவே ரெலோவின் முன்னெடுப்பில், பல கட்சிகள் கையொப்பமிட்ட ஆவணமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்று அந்த ஆவணம் அனுப்பப்பட்டுள்ளது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், கோவிந்தன் கருணாகரம், வினோ நோகராதலிங்கம் மற்றும் தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.
இந்த நிலையில், இலங்கை தமிழ் அரசு கட்சி தயாரித்த ஆவணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், கோவிந்தன் கருணாகரம், வினோ நோகராதலிங்கம் ஆகியோர் கையொப்பமிட வாய்ப்பில்லையென அறிய வருகிறது.
இலங்கை தமிழ் அரசு கட்சி தயாரித்த ஆவணத்தில், பான்கீ மூனால் 2010 இல் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு தயாரித்த அறிக்கையில், இலங்கை இராணுவமும், விடுதலைப் புலிகளும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள், மனித உரிமை சட்டங்களை மீறியுள்ளனர். இவற்றில் சில போர்க்குற்றங்கள், மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்களாக கருதப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது என பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வாக்கியத்தால், இலங்கை தமிழ் அரசு கட்சியின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது.
தமிழ்பக்கத்துடன் பேசிய, இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், தமது அதிருப்தியை ஆவணத்தயாரிப்பில் ஈடுபட்ட சுமந்திரனிடம் அறிவிக்கவுள்ளதாகவும், தமது அபிப்பிராயம் கணக்கெடுக்கப்படா விட்டால் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட மாட்டோம் என தெரிவித்தார்.
“பான்கீமூனினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையில் பல அவதானங்கள் செலுத்தப்பட்டுள்ளன. அதில் ஒன்றை நாம் சுட்டிக்காட்டி எமது ஆவணமொன்றில் இணைப்பதென்பது, நாமும் அந்த அவதானத்துடன் உடன்படுகிறோம் என்பதாலேயே. நாம் புத்திசாலிதனமாக செயற்படுகிறோம் என ஆவணத்தயாரிப்பில் ஈடுபட்டவர்கள் கருதக்கூடும். எமது விரலால் எமது கண்ணை குத்த நாம் தயாராக இல்லை.
தேவையெனில், இலங்கை தமிழ் அரசு கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களேனும் தனித்து ஒரு ஆவணத்தை மனித உரிமைகள் பேரவை ஆணையாளருக்கு அனுப்ப தயங்கப் போவதில்லை“ என அந்த நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்புவதற்காக இலங்கை தமிழ் அரசு கட்சி அனுப்பும் கடிதம் இணைக்கப்பட்டுள்ளது. இத்துடன், VERITE RESEARCH நிறுவனத்தின் ஆய்வும் ஆணையாளருக்கு இணைத்து அனுப்பி வைக்கப்படவுள்ளது.
அனேகமாக வரும் 6 அல்லது 7ஆம் திகதி இந்த ஆவணம் அனுப்பப்படும்.