போதை பொருள் வழக்கில் அமலாக்க துறை அதிகாரிகள் முன்பு நடிகை சார்மி கவுர் நேற்று ஆஜரானார்.
போதை மருந்து விவகாரத்தில் இயக்குநர் பூரி ஜெகன்நாத், நடிகை சார்மி கவுர், முமைத் கான், ரகுல் ப்ரீத் சிங், நடிகர்கள் ராணா, நவ்தீப், ரவிதேஜா உள்ளிட்டோர் சிக்கியுள்ளனர். ரகுல் ப்ரீத் சிங் தவிர மற்ற அனைவரிடமும் கடந்த 2017ஆம் ஆண்டு தெலங்கானா கலால் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
போதை மருந்து விவகாரத்தில், ஹவாலா பணம் கைமாறியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து போதை மருந்து விற்பனையாளர் கெல்வினிடம் கலால் துறை அதிகாரிகள், அமலாக்க துறை அதிகாரிகள் பல்வேறு கட்டங்களாக விசாரணை நடத்தினர். மும்பை போதை மருந்து வழக்குகளிலும் கெல்வின் சிக்கி உள்ளார். தற்போது இவர் அரசு தரப்பு சாட்சியாக மாறி பல உண்மைகளை அமலாக்க துறை அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
இவரின் செல்போனை கைப்பற்றிய அதிகாரிகள், அதில் உள்ள எண்களை ஆய்வு செய்தனர். தெலுங்கு திரைப்பட நடிகர்கள், நடிகைகள், இயக்குநர் பூரி ஜெகன்நாத் உட்பட பல பிரபலங்களின் எண்கள் செல்போனில் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதில் நடிகை சார்மியின் பெயருக்கு பதில், ‘தாதா’ என கெல்வின் பதிவு செய்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக நேற்று காலை 10.30 மணிக்கு ஹைதராபாத் அமலாக்க துறை அதிகாரிகள் முன்பு நடிகை சார்மி கவுர் ஆஜரானார். இவரிடம் 11 மணிக்கு விசாரணை தொடங்கியது. இயக்குநர் பூரி ஜெகன்நாத்திடம் நேற்று முன் தினம்10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் நடிகை சார்மியிடமும் மணிக்கணக்கில் விசாரணை நடத்தப்பட்டது.
பூரி ஜெகன்நாத்துக்கும், உங்களுக்கும் (நடிகை சார்மி) போதை மருந்து உபயோகிக்கும் பழக்கம் உள்ளதா? கெல்வினுடன் புகைப்படம் எடுத்துள்ளீர்கள். அவரின் செல்போனில் உங்களின் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு? எத்தனை ஆண்டுகளாக பழக்கம்? உங்களுடன் யார், யார்போதை பொருளை உபயோகிப்பர்? என பல்வேறு கேள்விகளை அமலாக்க துறை அதிகாரிகள் நடிகை சார்மியிடம் எழுப்பினர். இதற்கு அவர் அளித்த பதில்களை அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்..
கெல்வினின் வங்கி கணக்கில் நடிகை, நடிகர்கள் பணம் செலுத்தியது அம்பலமாகி உள்ள நிலையில், முன்னணி நடிகர், நடிகைகளின் எண்களும் கெல்வினின் செல்போனில் பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டறியப் பட்டுள்ளது. விசாரணையின்போது சார்மியின் வங்கி கணக்கு விவரங்களும் பெறப்பட்டன.
ரகுல் கோரிக்கை நிராகரிப்பு
போதை மருந்து விவகாரத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கும் அமலாக்க துறை சம்மன் அனுப்பி உள்ளது. இதன்படி வரும் 6ஆம் திகதி ஹைதராபாத்தில் இவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும். ஆனால், அன்றைய தினம் தவிர்க்க முடியாத பணிகள் இருப்பதால், வேறு ஏதாவது ஒரு திகதியை ஒதுக்க மின்னஞ்சல் மூலம் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், வரும் 6ஆம் திகதி ரகுல் ப்ரீத் சிங் கண்டிப்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்க துறை அதிகாரிகள் கூறி விட்டனர்.