கொழும்பிலுள்ள கனடா தூதரகத்தில் நடந்த சந்திப்பொன்று பற்றி தகவல் ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து, “வலுவான கண்காணிப்பின் கீழ் இலங்கையில் நான் உள்ளேனா?“ என்று இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினொன் கேள்வி எழுப்பியிருக்கின்றார்.
கொழும்பில் இராஜதந்திர மட்டத்திலான இரண்டு சந்திப்புக்கள் பற்றி, இரண்டு பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியிருந்தன. பத்திரிகை செய்தியொன்றை மேற்கோள் காட்டி, தனதுஉத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் டேவிட் மெக்கினொன், இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்டிருக்கும் தீர்மானத்திற்கு ஏனைய உறுப்பு நாடுகள் ஆதரவு வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் பிரசாரம் மேற்கொண்டு வருவதாக இரண்டு செய்தித்தாள்களும் செய்த வெளியிட்டுள்ளன.
கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினொன், பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரிக் அரிஃபுல் இஸ்லாமுடன் சந்திப்பொன்றை நிகழ்த்தியமை தொடர்பில் அச்செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
கொழும்பு 7 இல் உள்ள கனடா தூதரக அலுவலகத்தில் சந்திப்பு நடந்ததாகவும், அவ்விரு நாடுகளின் இராஜதந்திரிகளுக்கு இடையில் சந்திப்பு நிகழ்வது மிகவும் அரிதாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஓர் உறுப்பு நாடாக இருக்கிறது.
அண்மையில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் தென்கொரிய தூதுவர் வூன்ஜின் ஜியோங்கை சந்தித்திருந்தது பற்றியும் ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது. தென்கொரியாவும் மனித உரிமைகள் பேரவையில் அங்கத்துவம் வகிக்கிறது.
பங்களாதேஷ் தூதர் சந்திப்பிற்கு வந்த போது, தூதரகத்திற்கு வெளியில் எந்த ஊடகமும் இல்லாத நிலையில் செய்தி கசிந்ததை தீவிரமான விடயமாக கனடிய தூதர் குறிப்பிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, இன்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண, எந்த இராஜதந்திரியும் கண்காணிக்கப்படவில்லையென கூறினார்.




