கன்னட சினிமாவையே அதிர வைத்த போதை பொருள் கடத்தல் மற்றும் பயன்படுத்துதல் வழக்கில் கன்னட நடிகைகள் சஞ்சனா கல்ராணியும், ராகினி திவேதியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 3 மாத சிறை வாசத்துக்கு பிறகு இருவரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். வழக்கு தொடர்ந்து நடக்கிறது.
ஜாமீனில் வெளிவந்த இருவரும் மீண்டும் சினிமாவில் நடிப்பதில் பிசியாகி விட்டனர். இந்த நிலையில் இருவரும் தடை செய்யப்பட்ட போதை பழக்கத்துக்கு அடிமையானவர்களா என்பதை கண்டறிய தடய அறிவியல் துறையினர் அவர்களது இரத்தம், தலைமுடி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து வந்தனர். நேற்று முன்தினம் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அதில் இருவரும் போதை பொருள் பயன்படுத்துவது உறுதியானதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் இந்த வழக்கில் இருவரும் மீண்டும் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் நடிகை சஞ்சனா கல்ராணி திடீரென பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கவே இந்த ஆஸ்பத்திரி நாடகத்தை அவர் அரங்கேற்றி உள்ளதாக கூறப்படுகிறது.