அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு முடக்கத்திற்கு எதிராக போராடிய 250 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலருக்கு சுகாதார உத்தரவுகளை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டது.
நாடு முழுவதும் பல நகரங்களில் நடைபெற்ற சனிக்கிழமை நடந்த சில ஆர்ப்பாட்டங்களில் ஏற்பட்ட மோதலில் குறைந்தது ஏழு காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர். மிகப்பெரிய மற்றும் மிகவும் வன்முறை இடம்பெற்ற போராட்டம் மெல்போர்னில் நடந்தது.
இணையத்தளங்கள் ஊடாக இந்த போராட்டங்களிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
சிட்னி இரண்டு மாதங்களாக முடக்கப்பட்டுள்ளது. மெல்போர்ன் மற்றும் தலைநகரான கான்பெர்ரா இந்த மாத தொடக்கத்தில் முடக்கப்பட்டிருந்தன. முடக்கல் விதிகளின்படி, மக்கள் பெரும்பாலும் தங்கள் வீடுகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் சமூக தொடர்புகளுக்கு வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளன.
அந்த நடவடிக்கைகள் இருந்தபோதிலும், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சனிக்கிழமை 825 புதிய தினசரி தொற்று பதிவானது.
முடக்கல் முடிவடைய வேண்டும் என்று எதிர்ப்பாளர்கள் கூறுகிறார்கள், ஆனால் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தவும் உயிரைக் காப்பாற்றவும் அவசியம் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.
சிட்னியின் மத்தியப் பகுதியில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்களைக் கட்டுப்படுத்தும் பணியில் 1,500க்கும் கூடுதலான காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். சிட்னியில் சுமார் 50 பேர் கைதுசெய்யப்பட்டனர். பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை மீறிய குற்றத்திற்காகச் சுமார் 250 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.