26 C
Jaffna
December 17, 2024
Pagetamil
ஆன்மிகம்

உற்சாகமான விடியல் பிறக்கட்டும்: நபிமொழி எடுத்துக் கூறுகிறது

ஒவ்வொரு நாள் அதிகாலையிலும், அனைத்து உயிரினங்களும் புதிய விடியலைத் தேடி தான் உற்சாகமாய் எழுகிறது. எழுச்சியை நோக்கி நகர்கிறது. ஒவ்வொரு நாளின் விடியலும் உன்னதமானது என்பதை பின்வரும் வசனம் உணர்த்துகிறது:

“விடியற்காலையின் மீது சத்தியமாக!” (திருக்குர்ஆன் 89:1)

ஒவ்வொரு விடியலும் உற்சாகமாக விடிவதும், சோம்பலாக மாறிவிடுவதும் அவரவர் நடத்தையில் தான் உண்டாகிறது. இதை பின்வரும் நபிமொழி எடுத்துக் கூறுகிறது: “நீங்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது உங்கள் தலையின் பின்பக்கத்தில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போட்டு விடுகிறான். ஒவ்வொரு முடிச்சிலும், ‘இன்னும் உனக்கு நீண்ட இரவு (ஓய்வெடுப்பதற்காக எஞ்சி) இருக்கிறது. எனவே, நீ தூங்கிக் கொண்டேயிரு’ என்று போதித்து (அவனை விழிக்கவிடாமல் உறங்க வைத்து) விடுகிறான். அவர் (அவனது போதனையைக் கேட்காமல் அதிகாலையில்) கண் விழித்து, இறைவனை நினைவு கூர்ந்தால், ஒரு முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. அவர் (உளூ) அங்கத்தூய்மை செய்தால், மற்றொரு முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. அவர் அதிகாலைத் தொழுகையை தொழுதுவிட்டால், முடிச்சுகள் முழுவதுமாக அவிழ்ந்து விடுகிறது. அவர் சுறுசுறுப்புடனும், உற்சாகமான மனநிலையுடனும் காலைப்பொழுதை அடைவார். இல்லையென்றால் மந்தமான மனநிலையுடனும், சோம்பலுடனும் தான் காலைப்பொழுதை அடைவார்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

ஒவ்வொரு நாளும் புதிய விடியலை உற்சாகமாகவும், மனநிறைவாகவும் அடைந்து கொள்ள மூன்று விஷயங்களை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்.

1) இரவில் தூங்கி எழுந்தவுடன் முதலில் இறைவனை நினைக்க வேண்டும். பின்வரும் பிரார்த்தனையை ஓதவேண்டும்.

“நபி (ஸல்) அவர்கள் அதிகாலையில் எழுந்தால், பின்வரும் பிரார்த்தனையை புரிவார்கள். ‘அல்ஹம்துலில்லாஹில்லதீ அஹ்யானா பஃதமா அமாத்தனா வஇலைஹின் நுஷூர்’. இதன் பொருள்: எங்களை (சிறியதாக) மரணிக்கச் செய்த பின் உயிர்ப்பித்த இறைவனுக்கே புகழனைத்தும். மேலும் அவனிடமே நமது திரும்பிச் செல்லுதல் உள்ளது”. (அறிவிப்பாளர்: பராஉ (ரலி), நூல்: அஹ்மது)

2) இறைவனை நினைவு கூர்ந்தவுடன் உளூச் செய்ய வேண்டும்.

“நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்யும்போது தங்களின் உறுப்புக்களை மூன்று தடவை கழுவுவார்கள்” (நூல்: புகாரி )

3) உளூச் செய்தவுடன் உபரியான தொழுகை தஹஜ்ஜத் அல்லது கடமையான அதிகாலத் தொழுகை (பஜ்ர்) தொழவேண்டும்.

“சூரியன் உதயமாவதற்கு முன்னர் ‘பஜ்ர்’ எனும் அதிகாலைத் தொழுகையை தொழுதவர், சூரியன் மறைவதற்கு முன்னர் ’அஸர்’ எனும் மாலை நேரத் தொழுகையை தொழுதவர் எவரும் ஒரு போதும் நரக நெருப்பில் நுழையமாட்டார் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: உமாரா பின் ருஐபா (ரலி), நூல்: புகாரி)

“பகலின் வெப்பம் குறைந்த இரண்டு நேரத் தொழுகைகளை (பஜ்ர், அஸர்) தொழுகிறவர் சொர்க்கத்தில் நுழைவார் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர் : அபூமூஸா (ரலி), புகாரி)

“ஒருவர் விடியும் வரை தூங்கிக் கொண்டே இருக்கிறார். அவர் தொழுகைக்கு எழுவதில்லை”, என்று நபி (ஸல்) அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘ஷைத்தான் அவர் காதில் சிறுநீர் கழித்துவிட்டான்’ என்று விடையளித்தார்கள்”. (அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் (ரலி), புகாரி)

அதிகாலை வேளையில் இம்மூன்று செயல்களை கடைப்பிடிப்பவருக்கு அன்றைய தினம் புதியதோர் விடியலாக பிறக்கிறது. அது அவருக்கு உற்சாகத்தையும், மனநிறைவையும் கொடுக்கிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நல்லூர் கந்தன் கொடியேற்றம்!

Pagetamil

நல்லூர் கந்தனுக்கு கொடிச்சீலை எடுத்து வரும் நிகழ்வு

Pagetamil

நல்லூர் திருவிழா: காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு!

Pagetamil

நயினை நாகபூசணி அம்மன் தேர்த்திருவிழா

Pagetamil

மேஷம் முதல் மீனம் வரை: தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2024 – குரோதி வருடம் எப்படி?

Pagetamil

Leave a Comment