இந்தியா, இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி மழை காரணமாக டிரா ஆனதால், இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்று, இத்தொடரை வெற்றிகரமாகத் துவங்க இரு அணிகளும் கடுமையாகப் போராடி வருகிறது.
இரண்டாவது டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ஓபனர்கள் ரோஹித் ஷர்மா (83), கே.எல்.ராகுல் (129) இருவரும் நல்லமுறையில் சோபித்து, சிறப்பான துவக்கம் தந்தனர். இதனால், இந்திய அணி இரண்டாவது நாள் முதல் செஷன் வரை 346/7 ரன்கள் சேர்த்து நல்ல நிலையில் இருக்கிறது.
ரோஹித் ஷர்மா ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடக் கூடியவர். ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் என்ற மெகா சாதனையை செய்திருக்கிறார். இருப்பினும், டெஸ்டில் தனது திறமையை நிரூபிக்காமல் இருந்து வந்தார். 2015ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் ரோஹித் ஷர்மா 79 ரன்கள் அடித்திருந்தார். அந்நிய மண்ணில் இதுதான் ரோஹித்தின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக 83 ரன்கள் குவித்து, அந்நிய மண்ணில் தனது அதிகபட்ச ஸ்கோராக இதனைப் பதிவு செய்துள்ளார்.
ரோஹித் ஷர்மா ரன்களை எடுத்துக்கொள்ள நீண்ட நேரம் எடுத்துக் கொள்வதாகவும், ரன் அடிப்பதில் சோம்பேறி தனம் தெரிவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த விமர்சனங்கள் குறித்து வர்ணனையாளர் தினேஷ் கார்த்திக் ரோஹித்திடம் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ரோஹித் பேசினார். “நான் ரன் அடிக்க நிறைய நேரம் எடுத்துக்கொள்வதாகப் பலர் கூறுவது தெரியும். ஆனால், அப்படி இல்லை பாஸ் எனக்கு நேரம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பந்துகளை எதிர்கொள்ள எப்போதுமே தயாராகத்தான் இருப்பேன். எந்த ஒரு காரணத்திற்காகவும் அதிக நேரங்களை எடுத்துக்கொள்ள கூடாது. ஒவ்வொரு பேட்ஸ்மேனும், பந்துகளை எதிர்கொள்ளும்போது சிரமங்களை எதிர்கொள்வார். இந்த சிரமங்களை கடந்து சரியான மனநிலைக்கு வந்த பிறகுதான் ஷாட்களை அடிக்க ஆரம்பிப்பார்” எனக் கூறினார்.
மேலும் பேசிய ரோஹித், “பௌலர்கள் வேகமாக விக்கெட்களை எடுக்கக் கூடியவர்கள் என்றால், அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல் ரன் அடிக்க வேண்டும். டெக்னிக்காக ஒரு பேட்ஸ்மேன்கள் செட்டில் ஆக நீண்ட நேரம் எடுத்துக்கொள்வார்கள் என்பது சரிதான்” எனத் தெரிவித்தார்.
“நாம் ஒரு விளையாட்டை விளையாடும்போது, சோம்பேறித்தனம் இருக்கக் கூடாது. தொலைக்காட்சியில் பார்ப்பவர்களுக்கு வேண்டுமென்றால், நான் சோம்பேறித்தனமாக இருப்பதுபோல் தெரியலாம். அப்படி சோம்பேறியாக இருந்தால், களத்தில் சாதனைகளைச் செய்ய முடியாது. 145 கி.மீ வேகத்தில் வரும் பந்தை எதிர்த்து புல் ஷாட் ஆடுகிறேன் என்றால், அதில் ஒரு உழைப்பு இருக்கிறது. சோம்பேறித்தனமாக இருந்திருந்தால் அந்த ஷாட்டை நிச்சயம் ஆட முடியாது. நான் விளையாடத் துவங்கியதில் இருந்தே, ரோஹித் சோம்பேறியாக இருக்கிறார் என்ற வார்த்தையைக் கேட்டு வருகிறேன்” என ரோஹித் அதிரடியாக பதிலளித்தார். அதன்பிறகு, வர்ணனையாளர் தினேஷ் கார்த்திக் இதுதொடர்பாக எதுவும் பேசவில்லை.