கேரள மாநிலத்தை உலுக்கிய தங்கம் கடத்தல் வழக்கு, டாலர் கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் சபாநாயகர் பி. ஸ்ரீராமகிருஷ்ணன் ஆகியோர் பெயர் சேர்க்கப்பட்டு, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சுங்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தங்கம் கடத்தல் வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னாள் நிதித்தலைவர் காலீத் முகமது அலி சவுத்ரி, சரித், ஸ்வப்னா, சந்தீப், சந்தோஷ் எப்பன், சிவசங்கர் ஆகிய 6 பேருக்கும் சுங்கத்துறையினர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
கேரள மாநிலத்தை உலுக்கிய தங்கம் கடத்தல், டாலர் கடத்தல் வழக்கில் ஐக்கியஅரசு அமீரக தூதரகத்தில் பணியாற்றியவரும், கேரள அரசின் முதன்மைச் செயலாளர் அலுவலக்தில் பணியாற்றி வந்த ஸ்வப்னா சுரேஷ்,சரித் உள்ளிட்டோரை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கில் முதல்வரின் முதன்மைச் செயலாளர் சிவசங்கரனும் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளார்.
டாலர் கடத்தில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், சரித் இருவரும் சுங்கத்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில் “ ஐக்கியஅரபு அமீரகத்துக்கு தூதரக அதிகாரி ஜமால்அல் ஜாபி உதவியுடன் முதல்வர் பினராயி விஜயன், ஸ்ரீராமகிருஷ்ணன் ஆகியோர் டாலர்களை அனுப்பினர் என்று குற்றம்சாட்டியிருந்தனர்.
இதைத் தொடர்ந்து முதல்வரின் முதன்மைச் செயலாளர் எம். சிவசங்கர், கூடுதல் தலைமை ப்ரோடோகால் அதிகாரி ஷின் ஏ ஹக், ஹரிகிருஷ்ணன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி சுங்கத்துறைச்சட்டம் 108 -ன்பிரிவில் சுங்கத்துறையினர் வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.
இதன்படி, ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னாள் நிதித்தலைவர் காலீத் முகமது அலி சவுத்ரி, சரித், ஸ்வப்னா, சந்தீப், சந்தோஷ் எப்பன், சிவசங்கர் ஆகிய 6 பேருக்கும் சுங்கத்துறையினர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
சுங்கத்துறையினர் அனுப்பிய நோட்டீஸில் முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் ஆகியோர் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது. இதையடுத்து காங்கிரஸ் கட்சி “ இனியும் பினராயி விஜயன் முதல்வர் பதவியில் தொடரக்கூடாது ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
மாநில காங்கிரஸ் தலைவர் கே. சுதாகரன் அளித்த பேட்டியில் கூறுகையில் “ டாலர் கடத்தல் வழக்கில் இதுவரை எந்த முதல்வரும் ஈடுபட்டது இல்லை. டாலர் கடத்தல் வழக்கில் முதல்முறையாக முதல்வர் பெயர் சேர்க்கப்பட்டது என்றால் அது பினராயி விஜயன்தான். இனியும் பினராயி விஜயன் முதல்வர் பதவியில் தொடர்வதற்கு உரிமை இல்லை, அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்.
சோலார் பேனல் வழக்கில் அப்போது முதல்வராக இருந்த உம்மன் சாண்டியை முதல்வர் பதவியிலிருந்து விலக பினராயி விஜயன் வலியுறுத்தினார். இப்போது ஊழல் வழக்கில் அவரின் பெயர் சேர்க்கப்பட்டநிலையில் அவர் முதல்வர் பதவியில் தொடரக்கூடாது. அப்போது பேசிய வார்த்தைகளை பினராயி விஜயன் நினைவில் கொண்டால் இனியும் அவர் முதல்வராக நீடிக்க கூடாது” என வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே முதல்வருக்கும், அதிகாரிகளுக்கு எதிராக ஸ்வப்னா சுரேஷையும் சரித்தையும் கட்டாயப்படுத்தி வாக்குமூலம் அளிக்க அமலாக்கப்பரிவு அதிகாரிகள் வற்புறுத்தியதாக தகவல் எழுந்தது. இதுதொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி வி.கே. மோகனன் தலைமையில் விசாரணை ஆணையத்தை கேரள அரசு அமைத்தது. இந்த விசாரணை ஆணையத்துக்கு தடை விதித்து நேற்று கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது,கேரள அரசுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.