சீனாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள சேதன உரங்களை, இரு தரப்பினராலும் அங்கிகரிக்கப்பட்ட மூன்றாம் தரப்பினரைக் கொண்டு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, உரங்களை வழங்கும் சீன நிறுவனமான குவின்ங்டாவோ சீவின் பயோடெக் குருப் கொம்பனி நேற்று (26) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சேதன உரத்தில் அர்வினியா பக்டீரியா இருப்பது உறுதி செய்யப்பட்டால், ஒப்பந்தத்தை இரத்து செய்து, உர இருப்பை அகற்ற வேண்டும் இல்லையெனில், இலங்கை நிபந்தனையற்ற கொடுப்பனவுகளை செலுத்தி, உரத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேதன உரத்துக்கான கடன் கடிதம் செப்டம்பர் 17 அன்று திறக்கப்பட்டது என்றும் கடன் கடிதத்தில் குறிப்பிடப்பட்ட விநியோக திகக்கு ஏற்ப செப்டம்பர் 23 அன்று உரம் அனுப்பப்பட்டது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
உரத்தை சரியான நேரத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவதைத் தடுக்க செயற்கையான தடையை வாங்குபவர் உருவாக்குகிறார் என்று சந்தேகிக்க நல்ல காரணம் இருப்பதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
உரக் களஞ்சியத்தில் பக்டீரியாக்கள் இல்லை என கண்டறியப்பட்டால், இலங்கை ஊடகங்கள் உடனடியாக அந்தச் செய்தியை சரிசெய்து, பொய்ச் செய்திகளை வெளியிடுவதற்கான சட்ட நிலை குறித்து ஆராய வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் வங்கி கடன் கடிதத்தின் விதிமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக விதிகளுக்கு இணங்கவில்லை என்றால், அந்த வங்கியுடன் சீன நிறுவனங்கள் கையாள்வதை தடுக்க
நிறுவனம் பரிந்துரைக்கிறது.
உரிய முறையில் தீர்வு காணப்படாவிட்டால், இலங்கை அரசாங்கத்தின் கொள்வனவு செயற்பாட்டின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன், சீன நிறுவனங்களுடனான எதிர்கால கொடுக்கல் வாங்கல்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.