27 C
Jaffna
December 30, 2024
Pagetamil
முக்கியச் செய்திகள்

கொரோனா சடலங்களின் போக்குவரத்து வழிகாட்டல் குறிப்பு!

கொவிட்-19 தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்களை எடுத்துச் செல்லல் மற்றும் அதனை அடக்கம் செய்வது தொடர்பிலான சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய சுற்றுநிருபத்தை, சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி, கொவிட்-19 சடலங்களை அடக்குவதற்கு அனுமதி வழங்கும் அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்த நிலையில், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயத்தின் வழிகாட்டல்களுக்கு அமையவே அது இடம்பெறும் என அவ்வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

DGHS/COVID-19/347-2021 எனும் குறித்த சுற்றறிக்கை, நேற்று (03) சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவினால், அனைத்து மாகாண, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், அனைத்து வைத்தியசாலைகளுக்குமாக வெளியிடப்பட்டுள்ளன.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தயார்படுத்தல் மற்றும் போக்குவரத்துக்கான அனுமதிகள்
கொவிட் தொற்றாளர் ஒருவர் மரணிக்கும் நிலையில், எவ்வித தாமதமுமின்றி அவரது உறவினர்களுக்கு உடனடியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வைத்தியசாலையின் பணிப்பாளர் அல்லது அதன் பிரதானியினால், அடக்கம் செய்வது தொடர்பான எழுத்து மூல கோரிக்கை உறவினரிடமிருந்து பெறப்பட வேண்டும்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் பிரதிநிதி ஒருவரை தொடர்புகொண்டு, இறப்பு அத்தாட்சி படிவத்தில் அடக்கம் செய்யப்படும் இடத்தை இரணைதீவு என குறிப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும். சடலத்தை மருத்துவமனையிலிருந்து கொண்டு செல்லவும், முறையான அடக்கம் செய்யவும் இந்த ஆவணம் பயன்படுத்தப்படலாம். ஏதேனும் விசாரணைகள் நடத்தப்படும் நிலையில், திடீர் மரண விசாரணை அதிகாரி (ISD)/ மஜிஸ்ட்ரேட் ஆகியோரினால் அடக்கம் செய்யப்படும் இடம் குறிப்பிடப்பட வேண்டும்.

நிறுவனத்தின் (வைத்தியசாலையின்) பணிப்பாளர்/ தலைவரினால், சடலம் வெளியேற்றப்படும் திகதி மற்றும் நேரத்தை உறவினர்களுக்கு தெரிவிக்க வேண்டுமென்பதோடு, விரைவில் சவப்பெட்டியை வழங்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

உறவினர்களால் வழங்கப்பட்ட சவப் பெட்டியில் வைக்கப்பட்ட சடலத்தை போக்குவரத்துக்கு அனுப்பி, கொழும்பு தடயவியல் மருத்துவ நிறுவனம் (JMO) அல்லது வெலிக்கந்த ஆதார வைத்தியசாலையினால் நியமிக்கப்பட்ட அதிகாரியால் பெறப்படுவதை உறுதி செய்வது, பணிப்பாளர்/ பிரதானியின் கடமையாகும். இச்செயற்பாடு சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட பிரதிநிதி ஒருவருடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட வேண்டும் (தொடர்பு விபரம் கீழே காண்க)

சடலத்தை “நாச்சிகுடா கப்பல்” இற்கு கொண்டு செல்லும் வாகனம் தினமும் அதிகாலை 5.30 மணிக்கு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் பரிந்துரைக்கப்படும் பெறுதல் மையத்திலிருந்து புறப்படும். அங்கீகரிக்கப்பட்ட நபரால் சடலம் எடுத்துச் செல்லப்பட்டு, “நாச்சிகுடா கப்பல்” இல் பொறுப்புச் சாட்டப்பட்ட அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும். இது உரிய பிரதேச MOW பிரதிநிதியான PHI இனால் கண்காணிக்கப்படும். இலங்கை அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட ஒரு தீவில் பொலிஸ் அல்லது பாதுகாப்பு படை உத்தியோத்தரினால் வசதிகள் மற்றும் ஒருங்கிணைப்புகள் மேற்கொள்ளப்பட்டு, அடக்கம் செய்யப்படும் பகுதிக்குரிய MOW இன் பிரதிநிதியான PHI மற்றும் இரண்டு உறவினர்கள் முன்னிலையில் அடக்கம் நடைபெறும்.

போக்குவரத்துக்கு முன்னரான நடைமுறை
உறவினர்கள் முன்கூட்டியே ஒரு சவப்பெட்டியை வழங்க வேண்டும்.

சடலம் புறப்படுவதற்கு முன்னர், தனிப்பட்ட பாதுகாப்பு அங்கி (PPE) அணிந்த, மருத்துவமனையினால் நியமிக்கப்பட்ட சுகாதார ஊழியர்கள், ஏற்கனவே ஒதுக்கப்பட்ட இடத்திலிருந்து, உறவினர்கள் பார்வையிடுவதற்காக, உறவினர்கள் பார்க்கும் பகுதிக்கு சடலத்தைக் கொண்டு வர வேண்டும். சுகாதார சேவைகள் பணிப்பாளர் வழங்கிய வழிகாட்டல்களின்படி இக்கட்டத்தில் மாத்திரமே மத நடவடிக்கைகள் அனுமதிக்கப்படுகின்றன.

குறிப்பிட்ட (மத) நடவடிக்கைகள் முடிந்ததும், சடலத்தை மருத்துவமனையினால் நியமிக்கப்பட்ட சுகாதார ஊழியர்கள் (பொருத்தமான பாதுகாப்பு அங்கி PPE அணிந்து) எடுத்து வந்து, சடலத்தை உறவினர்கள் வழங்கிய சவப்பெட்டியின் உள்ளே வைப்பர். சவப்பெட்டியின் உள்ளே இருக்கும் சடலம் போக்குவரத்துக்கான வாகனத்தில் வைக்கப்பட்டு, கொழும்பில் சடலங்களைப் பெறுவதற்கு நியமிக்கப்பட்ட இடத்திற்கு கொண்டு செல்வதற்காக, MOW பிரதிநிதியான PHI மற்றும் பொலிசாரிடம் ஒப்படைக்கப்படும். சடலத்தை கொண்டு செல்லும் வாகனத்தின் சாரதி மற்றும் அவர்களுடன் செல்பவர்கள் அனைவரும், பொருத்தமான தனிநபர் பாதுகாப்பு அங்கியை அணிய வேண்டும். உரிய சுகாதார நிறுவனம்/களில் உறவினர்கள் அல்லது அங்கீகரிக்கப்படாத நபர்களால் புகைப்படங்கள், வீடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை எடுக்க அனுமதிக்கப்படமாட்டாது.

சடலத்தின் போக்குவரத்து
மரணம் நிகழ்ந்த மருத்துவமனைக்குச் சென்று, இறந்தவரை அடையாளம் கண்ட உறவினர்களில் இருவர், இரணைதீவில் அடக்கம் செய்யப்படுவதை பார்ப்பதற்காக, மறுநாள் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள நாச்சிகுடா கப்பலில் செல்ல அனுமதிக்கப்படுவர். இது சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட பிரதிநிதி ஒருவரின் ஒருங்கிணைப்புடன் இடம்பெற வேண்டும் (தொடர்பு விபரங்கள் கீழே காண்க). ஆயினும், குறித்த நபர்கள் COVID-19 நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளாக இருக்கக்கூடாது. தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் இறுக்கமான வழிகாட்ல் மற்றும் MOW பிராந்திய தொற்றுநோயியல் நிபுணரின் அனுமதியின் கீழ் மாத்திரமே அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் வழமையான தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும். இறுதியில், சடலத்துடனான சவப்பெட்டி, அடக்கம் செய்யப்படும் பகுதியின் MOW பிரதிநிதியான PHI இனால் பெறப்படும்.

சடலத்தைப் பெற்ற பின்னர், நியமிக்கப்பட்ட அதிகாரிகளால் உரிய சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்களுடன் சடலம் அடக்கம் செய்யப்படும் இடத்திற்கு கொண்டு செல்லப்படும். இதன்போது அடக்கம் செய்ய, பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரியுடன் இரண்டு உறவினர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவர். பிரதிநிதியான PHI மற்றும் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் அடக்கம் செய்யும் பணியைக் கையாள்வர்.

சவப்பெட்டி திறக்கப்படக்கூடாது என்பதுடன், உறவினர்கள் / நெருங்கிய உறவினர்கள் எந்தவொரு சூழ்நிலையிலும் சவப்பெட்டியைக் கையாள அனுமதிக்கப்படமாட்டார்கள்.

சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் பரிந்துரைக்கப்பட்ட, சுகாதார அமைச்சின் பிரதிநிதியை தொடர்பு கொள்ள:
வைத்தியர் அன்வர் ஹம்தானி – மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் மற்றும் COV1D-19 செயற்பாடுகள் தொடர்பான சுகாதார அமைச்சின் ஒருங்கிணைப்பாளர்
கையடக்க தொலைபேசி: 0771214131

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உப்பிற்கு தட்டுப்பாடு இல்லை – டி. நந்தன திலக

east tamil

இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே; பேச்சாளர் சுமந்திரன்; பலர் நீக்கம்!

Pagetamil

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு

Pagetamil

சுனாமி 20 வது ஆண்டு: இன்று தேசிய பாதுகாப்பு தினம்!

Pagetamil

பறவை மோதியதால் விபரீதமா?: பயணிகள் விமானம் விபத்து; ஏராளமானவர்கள் பலி!

Pagetamil

Leave a Comment