‘ஆர் ஆர் ஆர்’ படத்திற்காக கீரவாணி இசையில் ஐந்து மொழி பாடல்கள்…
ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஆர் ஆர் ஆர்’. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக இந்த படத்தைத் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்காக பல பிரம்மாண்டங்களை ஒருங்கிணைத்துள்ளார் இயக்குனர் ராஜமெளலி.
ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள ‘ஆர் ஆர் ஆர்’ படத்தின் மேக்கிங் வீடியோ அண்மையில் வெளியாகி பெரும் வைரலானது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் இந்தப் படம் வெளியாகவுள்ளது. கீரவாணி இசையமைப்பாளராக பணியாற்றி வரும் இந்த படத்தின் பாடல்கள் உருவாக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் நட்பைப் பற்றிப் பாடலொன்று இடம்பெறுகிறது. நாளை காலை 11 மணிக்கு இந்தப்பாடல் வெளியாக உள்ளது. இந்தப்பாடலின் வரிகளை தெலுங்கில் ஸ்ரீவெண்ணிலா சீதாராம சாஸ்திரி, தமிழில் மதன் கார்க்கி, இந்தியில் ரியா முகர்ஜி, கன்னடத்தில் ஆசாத் வரதராஜ், மலையாளத்தில் மான்கொம்பு கோபாலகிருஷ்ணன் ஆகியோர் எழுதியுள்ளனர். இந்தப் படத்தின் அனைத்து மொழிகளின் இசை உரிமையை டி-சீரிஸ் நிறுவனம் மற்றும் லகரி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இந்த பாடலை தமிழில் அனிருத்தும், மலையாளத்தில் விஜய் யேசுதாஸும், ஹிந்தியில் அமித் திரிவேதியும், தெலுங்கில் ஹேமச்சந்திராவும், கன்னடத்திலும் யசின் நசிரும் பாடியுள்ளனர். இந்தப் பாடலைப் பெரும் பொருட்செலவில் அரங்குகள் அமைத்து காட்சிப்படுத்தியுள்ளார் ராஜமெளலி. இந்த பாடலுக்காக உருவாக்கப்பட்ட அரங்கிற்கு மட்டும் 6.5 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் இந்தப்பாடலில் படக்குழுவினர் அனைவரும் இடம்பெறுவது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்றொரு பிரம்மாண்டமாக ‘ஆர்.ஆர்.ஆர்’ நடிகர்களுடன் ‘பாகுபலி’ நாயகன் பிரபாஸ், வில்லன் ராணா ஆகியோருடம் இந்த பாடலில் இடம்பெற உள்ளனராம். நாளை வெளியாகும் இந்த பாடலுக்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.