அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மகள் ஜெய ஹரிணிக்கும், பூண்டி வாண்டையார் பேரன் ராமநாத துளசி வாண்டையார் இருவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி திருவண்ணாமலையில் திருமணம் நடைபெற்றது.
இன்று காலை 11 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டம் பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரி வளாகத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சசிகலா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்றுவரும் டிடிவி.தினகரன் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா பங்கேற்றார். இதற்கான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதிமுக பொன்விழாவை ஒட்டி சசிகலா எம்ஜிஆர் நினைவிடத்தில் அதிமுக கொடி ஏற்றியது, அதிமுக கொடி பொருந்திய காரில் பயணித்தது, எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் அதிமுக சிறப்பு மலர் வெளியிட்டது என அதகளப்படுத்தினார். அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்த எந்த உரிமையும் கிடையாது/ இதை சட்டரீதியாக சந்திப்போம் என எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில் தான் அதிமுகவில் சசிகலா இணைப்பு நடைபெறுமா? என்ற கேள்விக்கு சமீபத்தில் பதிலளித்த ஓபிஎஸ், தலைமை கழக நிர்வாகிகள் கலந்து பேசி முடிவெடுப்பார்கள் என்றார்.
இது அதிமுக மூத்த நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஓபிஎஸ் கருத்துக்கு பலரும் எதிர்வினையாற்றினர். ஓபிஎஸ் ஆதரவாளராக பார்க்கப்படும் கேபி முனுசாமி உள்ளிட்டோர் கூட இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இப்படி அதிமுகவுக்குள் மீண்டும் ஓர் புதிய சர்ச்சை சென்று கொண்டிருக்கையில் ஓபிஎஸ் தம்பி தினகரன் வீட்டு திருமணத்தில் கலந்து கொண்டது கூடுதல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.