முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து தென்னாபிரிக்காவில் கலவரங்கள் மற்றும் சூறையாடல்கள் தீவிரம் பெற்றுள்ளன. இந்த கொந்தளிப்புக்களினால் இதுவரை ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கலவரங்களின் தீவிரத்தை ‘போர் போன்ற’ என அந்த நாட்டு ஊடகங்கள் வர்ணித்துள்ளன.
ஊழல் விசாரணைக்கு ஒத்துழைக்கத் தவறியதற்காக 15 மாத கால சிறைவாசத்தை தொடங்க, ஜுமா சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டதை தொடர்ந்து, தென்னாபிரிக்காவில் பரவலாக ஆர்ப்பாட்டங்கள் வெடித்து, வன்முறையாக மாறின.
ஜுமாவின் சொந்த மாநிலமான குவாசுலு-நடாலில் வன்முறைகள் உச்சமடைந்துள்ளன. வணிக நிறுவனங்கள், அரச அலுவலகங்கள் தீ வைக்கப்பட்டுள்ளன. அண்டை மாநிலமாக குவாடெங்கிலும் அதன் மிகப்பெரிய நகரமான ஜோகன்னஸ்பர்க்கிலும் வன்முறைகள் பரவியுள்ளது.
ஆறு மாத சிறுமி உள்ளிட்ட ஏராளமான காயமடைந்தவர்களிற்கு சிகிச்சையளித்ததாக வைத்தியர் ஒருவர் சர்வதேச ஊடகங்களிடம் தெரிவித்தார்.
வன்முறை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சத்தில், சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க உதவுவதற்காக இராணுவம் இப்போது அழைக்கப்படுகிறது.
நிறவெறி மற்றும் வெள்ளை சிறுபான்மை ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட தென்னாப்பிரிக்காவின் மூத்த வீரரான ஜுமா மீதான நீதி விசாரணையை தொடர்ந்து இந்த வன்முறை ஏற்பட்டது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூன்று தொழிலதிபர்களான சகோதரர்களுடனான அவரது உறவு தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது.
அதுல், அஜய் மற்றும் ராஜேஷ் குப்தா ஆகியோர் அரச வளங்களை கொள்ளையடிக்க அனுமதித்ததாகவும், அரசாங்கக் கொள்கையின் மீது செல்வாக்கு செலுத்த அனுதித்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
79 வயதான அவர் விசாரணையில் ஒத்துழைக்க மறுத்துவிட்டார். விசாரணையை அவரது வாரிசான சிரில் ரமபோசா சூனிய வேட்டை என்று விவரித்தார், கடந்த வாரம் விசாரணைக்கு ஆஜராகி சாட்சியங்களை வழங்குவதற்கான நீதிமன்ற தீர்ப்பை அவர் ஏற்கவில்லை.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஒரு நீதிபதி அவரை 15 மாதங்கள் சிறையில் அடைத்தார்.
கடந்த வாரம் வியாழக்கிழமை அவர் போலீசில் சரணடைந்த பின்னர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அதை தொடர்ந்து வன்முறைகள் ஆரம்பித்துள்ளன.




