சல்மான்கான், அவரது சகோதரி அல்விராகான் மற்றும் பீயிங் ஹ்யூமன் அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கு பொலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான்கான் ஏற்கனவே அரிய வகை மானை வேட்டையாடிய வழக்கில் சிக்கினார். தற்போது அவர் மீது புதிதாக மோசடி புகார் கூறப்பட்டு உள்ளது.
சண்டிகார் நகரை சேர்ந்த தொழில் அதிபர் அருண் குப்தா என்பவர் சல்மான்கான் மற்றும் அவரது சகோதரி அல்விராகான் ஆகியோர் மீது போலீசில் அளித்துள்ள புகார் மனுவில், ‘’நான் சண்டிகாரில் 2018-ல் சல்மான்கானின் பீயிங் ஹ்யூமன் நிறுவனம் பெயரில் அதிக பணம் செலவழித்து நகைக்கடை தொடங்கினேன். கடைக்கு தேவையான பொருட்களை அளிப்பதாக சல்மான்கான் தரப்பில் தெரிவித்தனர். ஆனால் சொன்னபடி செய்யவில்லை.
கடை திறப்பு விழாவில் சல்மான்கான் கலந்து கொள்வார் என்று கூறினர். ஆனால் அவர் வரவில்லை. கடைக்கு தேவையான பொருட்களை அனுப்பாததால் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் கடை பூட்டப்பட்டு எனக்கு பொருளாதார இழப்பும், மன உளைச்சலும் ஏற்பட்டு உள்ளது’’ என்று குறிப்பிட்டு உள்ளார்.
இந்த புகாரின் பேரில் சல்மான்கான், அவரது சகோதரி அல்விராகான் மற்றும் பீயிங் ஹ்யூமன் அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் வருகிற 13- விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி பொலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.