யாழ் மாவட்டத்தில் 2ஆம் கட்டத்தின் முதலாவது தடுப்பூசியேற்றும் பணிகள் கடந்த யூலை மாதம் 5ஆம் திகதி திங்கட்கிழமை முதல் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின்கீழ் யூலை மாதம் 5ஆம் திகதி முதல் நாளில் யாழ் மாவட்டத்தில் 9,465 பேருக்கும், 6ஆம் திகதி இரண்டாம் நாளில் 9,457 பேருக்கும், 7ஆம் திகதி மூன்றாம் நாளில் 12,034 பேருக்கும், 8 ஆம் திகதி நான்காம் நாளில் 7,497 பேருக்கும் என மொத்தமாக 38,456 பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
பாடசாலை ஆசிரியர்களுக்கு தடுப்பூசியேற்றும் பணிகள் யூலை மாதம் 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறும்.
மேலும், 18 வயதிற்கு மேற்பட்ட ஆபத்துநிலை உடைய கர்ப்பிணித் தாய்மார்கள், 35 வயதிற்கு மேற்பட்ட அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கும், முன் களப் பணியாளர்களாக உள்ள கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் அவர்களுடைய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் எதிர்வரும் யூலை 10ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் தடுப்பூசிகள் வழங்குவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.
தடுப்பூசி அல்லது வேறு மருந்துகளிற்கு ஒவ்வாமை உடையவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு யாழ் போதனா வைத்தியசாலையிலும், தெல்லிப்பளை, பருத்தித்துறை, சாவகச்சேரி மற்றும் ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைகளிலும் எதிர்வரும் யூலை 10ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.00 மணிமுதல் வழங்குவதற்கு ஒழுங்குகள்
செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறான நிலைமைகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு தடுப்பூசி வழங்கப்படாது திருப்பி அனுப்பப்பட்டவர்கள் தமது பிரதேசத்திற்குரிய சுகாதார வைத்திய அதிகாரியின் பரிந்துரைக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு மேற்குறிப்பிட்ட வைத்தியசாலைகள் ஏதாவது ஒன்றில் தமக்குரிய தடுப்பூசியினை பாதுகாப்பாக பெற்றுக்கொள்ள முடியும்.
வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன்
மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்




