குறித்த பாடசாலைக்கான ஐந்து ஏக்கர் காணியினை பிரதமரின் இணைப்புச் செயலாளர் கௌரவ செந்தில் தொண்டமான் அவர்கள் பெற்றுத்தந்ததை தொடர்ந்து, குறித்த காணியின் அளவீடுகளை பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும். அதனை தொடர்ந்து மூன்று மாடிக் கட்டிடத்தினை பெற்றுக்கொடுக்க தோட்ட வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்கள் உறுதியளித்துள்ளார்.
இரத்தினபுரி தமிழ் கல்லூரியின் ஆரம்பக்கட்ட அபிவிருத்தி பணிகளுக்காக நிதி ஒதுக்கீடுகளை பெற்றுத்தருமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாள் அவர்களின் தலைமையில் அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் வர்த்தகர்கள் கௌரவ இராஜாங்க அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரஜாசக்தி வேலைத்திட்டத்தின் நிறைவேற்று இயக்குனர் பாரத் அருள்சாமி அவர்களும் கலந்து கொண்ட இக் கலந்துரையாடல் கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள தோட்ட வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சில் இடம்பெற்றது.




