ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை யானா ஸிஜிகோவா மீது பிரெஞ்ச் ஓபன் போட்டியில் பணம் பெற்றுக்கொண்டு விளையாடியதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து பிரெஞ்ச் காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரித்தனர் இந்த விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்படாததால் மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார் யானா ஸிஜிகோவா.
டென்னிஸ் இரட்டையர் போட்டிகளில் உலக தரவரிசைப்பட்டியலில் 109 வது இடத்தில் உள்ளார் யானா ஸிஜிகோவா.
2020 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற பிரெஞ்ச் ஓபன் போட்டியில் அமெரிக்காவின் மேடிசன் ப்ரெங்களே-வுடன் ஜோடி சேர்ந்து ருமேனிய வீராங்கனைகள் ஆண்ட்ரியா மிட்டு மற்றும் பேட்ரிஸியா மரியா டிக் ஜோடியை எதிர்த்து விளையாடினார்கள். இந்தப் போட்டியில் ருமேனிய ஜோடி வெற்றிபெற்றது.
இந்நிலையில் இந்த பந்தயத்தில் ருமேனிய அணி வெற்றிபெறும் என்று கோடிக்கணக்கில் பெட் கட்டியிருந்தனர். இதனைத் தொடர்ந்து ரஷ்ய வீராங்கனை பணம் பெற்றுக் கொண்டு விளையாடினார் என்றும் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டார் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த குற்றச்சாட்டு மீதான விசாரணையை கடந்த அக்டோபர் மாதம் துவங்கிய பிரெஞ்ச் காவல்துறையினர் 2021 ம் ஆண்டு ஜூன் மாதம் ஸிஜிகோவா-வை விசாரணைக்காக கைது செய்தனர்.
விசாரணையில் யானா ஸிஜிகோவா பணம் பெற்றதற்கான ஆதாரம் எதுவும் சிக்காததால் அவரை விடுவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, ரஷ்ய வீராங்கனை யானா ஸிஜிகோவா தன் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காகவே தன்னை வேண்டுமென்றே விசாரணை செய்ததாகக் கூறி மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார், இதுகுறித்த அறிவிப்பை நேற்று அவரது வழக்கறிஞர் வெளியிட்டார்.