மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கடந்த பெப்ரவரி மாதம் 1-ந் திகதி இராணுவம் கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. மேலும் நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை கைது செய்து வீட்டு காவலில் வைத்துள்ளது. இராணுவ ஆட்சிக்கு எதிராகவும், ஆங் சான் சூகிக்கு ஆதரவாகவும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை இராணுவம் கொடூரமாக அடக்கிவருகிறது. இதில், சுமார் 870 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆங் சான் சூகி மீது, தேசத்துரோகம், ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அடுத்த வாரம் மீண்டும் விசாரணை தொடங்க உள்ளது.
இந்நிலையில், வீட்டுக்காவலில் உள்ள ஆங் சான் சூகிக்கு நேற்று 76வது பிறந்தநாள். அவரது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் மியான்மர் முழுவதும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் தலைமுடியில் பூக்களை அணிந்திருந்தனர். கேக் வெட்டி, அவரை வாழ்த்தி கோஷங்களை எழுப்பினர்.
தலை முடியில் பூக்களை அணிந்திருப்பது ஆங் சாங் சூகியின் அடையாளமாக உள்ளது. எனவே, இன்றைய போராட்டத்தின்போது பலரும் பூக்களை அணிந்திருந்தனர். பலர், விதவிதமான பூக்களை தலையில் அலங்கரித்து, புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். ஆங் சாங் சூகியின் போஸ்டர்கள் முன்பு மலர்கொத்துக்களை வைத்தும் வாழ்த்து தெரிவித்தனர்.
மியான்மர் மிஸ் யுனிவர்ஸ் அழகு ராணியான துசார் வின்ட் எல்வின், தனது தலைமுடியில் சிவப்பு நிற பூக்களை அணிந்து, அதனை புகைப்படம் எடுத்து வலைத்தளத்தில் பதிவேற்றி உள்ளார். ‘எங்கள் தலைவர் ஆரோக்கியமாக இருக்கட்டும்’ என்ற கருத்தையும் அவர் பதிவிட்டிருந்தார்.