கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து திரைப்பிரபலங்கள் பலரும் முதல்வரை நேரில் சந்தித்தும், ஆன்லைன் மூலமாகவும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
அந்த வகையில், பிரபல தயாரிப்பாளர் தாணு கொரோனா தடுப்பு பணிக்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கி உள்ளார். அத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலினைப் பாராட்டி கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
“பெருந்தொற்றுக் காலத்தில் ஆட்சியின் முதல் மாதத்தை நிறைவு செய்த நிலையில் உங்களின் வேகமான நடையும், விவேகமான முடிவும், ஓய்வில்லா களப்பணியும் தேசத்தை திரும்பிப் பார்க்க வைக்கிறது.
தமிழகத்தின் துரித வளர்ச்சியில் உங்கள் தொலைநோக்குப் பார்வையும், பெருந்தொற்று பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்த விளிம்புநிலை மக்களுக்காக நீங்கள் படைத்த பசியாற்றும் திட்டங்கள் உங்களையும், உங்கள் சந்ததிகளையும் தேக பலம், மனோ பலத்துடன் நீண்ட ஆயுளை அள்ளித் தரும்.
உங்கள் தர்ம சிந்தனைக்கு, சினிமா தொழில் சிதைந்து நிற்கும் சூழலில் எனது சிறிய பங்களிப்பாக 10 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளேன். உங்கள் வழியில் தமிழகம் தலைநிமிர்ந்திட நெஞ்சம் நிறைந்து வாழ்த்துகிறேன்”.
இவ்வாறு தாணு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.