விஜய் சேதுபதி நடித்து சூப்பர் ஹிட்டடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ திரைப்படம் தற்போது பஞ்சாபி மொழியில் ரீமேக்காக உள்ளது.
தமிழ் திரையுலகில் சூப்பர் ஹீரோவாக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் ஆரம்பகால வெற்றிப்படங்களில் ஒன்று ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’. கடந்த 2012ல் வெளியான இப்படத்தை பாலாஜி தரணிதரன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாகவும், காயத்ரி ஷங்கர் ஹீரோயினாகவும் நடித்திருந்தனர். இவர்களுடன் விக்னேஷ்வரன் பழனிசாமி, பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் சுமார் 80 லட்சம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 18 கோடி வரை வசூல் சாதனை படைத்தது.
கதைப்படி திருமணத்துக்கு சில நாட்களுக்கு முன்பு கிரிக்கெட் விளையாட செல்கிறார் ஹீரோ விஜய் சேதுபதி. அப்போது தலையில் அடிபட்டு சமீப காலங்களில் நடந்ததை அனைத்தையும் மறந்துவிடுகிறார். கடைசியில் ஹீரோவின் நண்பர்கள் எல்லாவற்றையும் மறைத்து, யாருக்கும் தெரியாமல் எப்படியோ திருமணத்தை நடத்தி முடிக்கிறார்கள். இந்த மொத்த படத்தையும் த்ரில்லர் பாணியில் காமெடியாக காட்டியிருந்தார் இயக்குனர்.
இந்த படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி என்ற மாபெரும் ஹீரோ தமிழ் திரையுலகில் பிரபலமானார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் தெலுங்கில் ‘புஸ்தகாம்லோ கொன்னி பேஜெலு மிஸ்ஸிங்’, கன்னடத்தில் ‘குவாட்லி சதீஷா’, மலையாளத்தில் ‘மெதுல்லா ஒப்லங்காட்டா’, ஒடியாவில் ‘சுனா பிலா டைக் ஸ்க்ரூ திலா’, குஜராத்தியில் ‘ஷு தாயு’ என பலமொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றிப்பெற்றது. இந்நிலையில் இந்த படத்தை பார்த்த பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தற்போது பஞ்சாபி மொழியில் ரீமேக் செய்யவுள்ளார். அதோடு ஹீரோவாக ஹர்பஜன் சிங்கே நடிக்கவுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.