கிளிநொச்சியில் கொரோனா தொற்று பரவல் ஆபத்துள்ள ஆடைத்தொழிற்சாலைகளை மூட வேண்டுமென உத்தரவிட கோரி, கரைச்சி பிரதேசசபையினால் இன்று கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.
கரைச்சி பிரதேசசபையின் கடந்த அமர்வில், கரைச்சி பிரதேசசபை எல்லைக்குட்பட்ட ஆடைத் தொழிற்சாலைகளை தற்காலிகமாக மூடுவதென தீர்மானிக்கப்பட்டது.
கிளிநொச்சியில் கொரோனா தொற்று பரவலிற்கு ஆடைத் தொழிற்சாலைகளே காரணமாக இருந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களின் பின்னணியில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை கொத்தணியினால் கிளிநொச்சி கிராமமொன்றே முடக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பிரதேசசபையின் தீர்மானம் ஆடைத் தொிற்சாலைகளிடம் நேரடியாக அறிவிக்கப்பட்டது. எனினும், அந்த தீர்மானத்தை ஆடைத் தொழிற்சாலைகள் கணக்கில் எடுக்கவில்லை. ஆடைத் தொழிற்சாலையை மூட மறுத்து விட்டன.
இதையடுத்து, இன்று கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் ஆடைத் தொழிற்சாலைகளிற்கு எதிராக வழக்கு தொடரப்படவுள்ளது.