பிரபல பாலிவுட் நடிகை யாமி கவுதம் தான் நடித்த யுரி படத்தை இயக்கிய ஆதித்யா தாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
கௌரவம் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தவர் யாமி கவுதம். தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் படத்திலும் நடித்திருக்கிறார். அவர் தமிழ் தவிர்த்து தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக பாலிவுட்டில் தான் கவனம் செலுத்தி வருகிறார்.
விக்கி டோனார் படம் மூலம் தான் யாமி பாலிவுட்டில் அறிமுகமானார். முதல் படமே அவருக்கு வெற்றியை தேடித் தந்தது. தேசிய விருதுகளை வென்ற யுரி- தி சர்ஜிகல் ஸ்டிரைக் படத்தில் பல்லவி சர்மா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் யாமி. அந்த படத்தை ஆதித்யா தார் இயக்கியிருந்தார்.
இந்நிலையில் ஆதித்யா தாருக்கும், யாமி கவுதமுக்கும் இன்று திருமணம் நடந்துள்ளது. கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாக இருப்பதால் யாரையும் அழைக்காமல் எளிமையாக திருமணத்தை நடத்தியிருக்கிறார்கள்.
திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு யாமி கூறியிருப்பதாவது,
எங்கள் குடும்பத்தாரின் ஆசியுடன் இன்று திருமணம் செய்து கொண்டோம். எங்கள் குடும்பத்தாருடன் இந்த மகிழ்ச்சியான தருணத்தை கொண்டாடினோம்.இந்த புதுப் பயணத்தை நாங்கள் துவங்கியிருக்கும் நேரத்தில் உங்களின் ஆசி மற்றும் வாழ்த்துக்களை எதிர்பார்க்கிறோம் என தெரிவித்துள்ளார்.
யாமியின் போஸ்ட்டை பார்த்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.யாமியின் திருமண புகைப்படத்தை பார்த்ததும் பிரபல பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யன் தான் முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
யாமியும், ஆதித்யா தாருமா? இதை சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. ஆனால் புகைப்படத்தில் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக காணப்படுகிறீர்கள். அதில் இருந்தே உங்களின் காதல் தெரிகிறது. இன்று போன்று என்றும் சந்தோஷமாக இருக்க வாழ்த்துக்கள் யாமி என ரசிகர்கள் வாழ்த்தியுள்ளார்கள்.