விஜய்யை வைத்து படம் பண்ணப் போவதாகவும், அது தன் கெரியரின் மிகப் பெரிய படமாக இருக்கும் என்றும் பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபல்லி தெரிவித்துள்ளார்.
மாஸ்டர் படத்தை அடுத்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார் விஜய். முதல் கட்ட படப்பிடிப்பை ஜார்ஜியாவில் நடத்தினார்கள். கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமடைந்ததால் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை துவங்க முடியாமல் இருக்கிறது.
இந்நிலையில் பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபல்லி சென்னைக்கு வந்து விஜய்யை சந்தித்து கதை சொன்னதாகவும், அது அவருக்கு மிகவும் பிடித்துப் போய் நாம் இந்த படத்தை கண்டிப்பாக பண்ணுகிறோம் என்று கூறியதாகவும் தகவல் வெளியானது.
வம்சி பைடிபல்லி, விஜய் இணையும் படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால் இதை சம்பந்தப்பட்ட யாரும் உறுதி செய்யவில்லை.
இந்நிலையில் விஜய்யை இயக்குவதை வம்சி பைடிபல்லி உறுதி செய்துள்ளார். அவர் தெலுங்கு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
நான் விஜய்யை வைத்து படம் இயக்கப் போவது உண்மை தான். இது என் கெரியரின் மிகப் பெரிய படமாக இருக்கும். அந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். படத்தை பெரிய பட்ஜெட்டில் எடுக்கவிருக்கிறோம் என்றார்.
வம்சி, விஜய் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தையும் தில் ராஜு தான் தயாரிக்கிறார். முன்னதாக இந்தியன் 2 படத்தை தயாரிக்க தில் ராஜு முன்வந்ததாகவும், அவரிடம் பேசி மனம் மாற்றிவிட்டு லைகா தானே தயாரிப்பு பொறுப்பை ஏற்றதாகவும் ஷங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
தில் ராஜு மட்டும் தயாரித்திருந்தால் இந்தியன் 2 படம் எப்பொழுதோ ரிலீஸாகியிருக்கும் என்று ஷங்கர் மேலும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெத்த தயாரிப்பாளர் என்பதால் விஜய் படத்தில் பிரமாண்டத்திற்கு குறைவிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.