காசா மீதான இஸ்ரேலின் கொடிய தாக்குதல்கள் போர்க்குற்றங்களாக இருக்கலாம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் மைக்கல் பேச்லெட் இன்று (27)வியாழக்கிழமை, கூறினார்.
காசா மீதான இஸ்ரேலின் கொரூர தாக்குதலையடுத்து, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தை கூட்ட வேண்டுமென முஸ்லீம் நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க, 47 உறுப்பினர்களைக் கொண்ட ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் சிறப்பு அமர்வு இன்று ஆரம்பித்தது.
இந்த அமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய பச்லெட் அம்மையார், இஸ்ரேலிய தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட காசாவில் உள்ள பொதுமக்கள் கட்டிடங்கள் இராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறினார்.
“இதுபோன்ற தாக்குதல்கள் போர்க்குற்றங்களாக இருக்கலாம். காசாவில் உள்ள பாலஸ்தீனிய போராளி குழு ஹமாஸ், இஸ்ரேல் மீது கண்மூடித்தனமான ரொக்கெட்டுகளை வீசுவதைத் தவிர்க்க வேண்டும்“ என்றும் அவர் வலியுறுத்தினார்.