இராகலை மாகுடுகல தோட்ட தொழிலாளர்கள் கடந்த இரண்டு மாதங்களாக மேற்கொண்டு வந்த போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
தோட்டம் உரிய முறையில் நிர்வாகத்தால் பராமறிக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்தை சுட்டி காட்டி இவ்வாறு தொடர் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நிலவிய போராட்டம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் தலையீட்டால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் மற்றும் பிரஜாசக்தி செயற்திட்டத்தின் பணிப்பாளர் பாரத் அருள்சாமி இதனை தெரிவித்துள்ளார்.
மேற்படி பிரச்சினைக்கு தீர்வாக இதுவரை மாகுடுகல தோட்டத்தை நிர்வகித்த செரண்டிப் நிர்வாகத்திடம் இருந்து அதனை மத்துரட பிளாண்டேஷன் நிர்வாகத்திற்கு வழங்க தீர்மானித்துள்ளதாக பாரத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் மத்துரட பிளாண்டேஷன் நிர்வாகம் மாகுடுகல தோட்டத்தை அபிவிருத்தி செய்து நடத்திச் செல்வதாக உறுதியளித்தாக அவர் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.
முக்கியமாக மாகுடுகல தோட்ட தொழிலாளர்களுக்கு அனைத்து சலுகைகளையும், உரிமைகளையும் வழங்க மத்துரட பிளாண்டேஷன் நிர்வாகம் இணங்கம் வெளியிட்டள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலையிட்டு மேற்படி பிரச்சினைக்கு தீர்வை வழங்கியதாகவும் தொடர்ந்தும் மாகுடுகல தோட்ட தொழிலாளர்களுக்காக இ.தொ.க முன்னிற்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இச்சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் மற்றும் பிரஜாசக்தி செயற்திட்டத்தின் பணிப்பாளர் பாரத் அருள்சாமி உடன், இ.தொ.காவின் உப தலைவர் பிலிப்குமார், நுவரெலியா மாவட்ட பணிப்பாளர் லோகதாஸ், நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜ், உறுப்பினர் லிங்கேஷ்வரன், மாவட்ட தலைவர்கள், தலைவிமார்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
–க.கிஷாந்தன்-