அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு இடையில் ஒருவருக்கு கூட தொற்று ஏற்படாத கிராமம் ஒன்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. முதல் அலையில் பெரிதாக உயிரிழப்புகள் இல்லாத சூழலில், தற்போது அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவது அதிர்ச்சி அளிக்கிறது. கொரோனா இல்லாத இடமே இல்லை என்று கூறுமளவிற்கு நிலைமை மோசமடைந்துள்ளது. அதையும் மீறி கேரளாவில் உள்ள ஒரு கிராமம் வைரஸ் தொற்று பரவாமல் தற்காத்து நிற்கிறது.
இது இடுக்கி மாவட்டம் மூணாறில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள எடமலைக்குடி பஞ்சாயத்து ஆகும். இங்கு 750 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 3,000 பழங்குடியின மக்கள் பரந்து விரிந்த வனப்பகுதியில் வசித்து வருகின்றனர். சைவ உணவும், இயற்கையான காற்றும் இவர்களின் ஆரோக்கியத்தை பேணி வருகின்றன. கேரள மாநிலத்தில் மட்டுமின்றி தென்னிந்தியாவிலும் கொரோனா இல்லாத பஞ்சாயத்து என்ற பெருமையை பெற்றுள்ளது.
இடுக்கி மாவட்டத்தின் வனப்பகுதிகளில் ஏராளமான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் முதல் அலை உருவான போது ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்பே சுய தனிமை, பஞ்சாயத்து அளவிலான ஊரடங்கு உள்ளிட்ட விஷயங்களை கடைபிடித்து வருகின்றனர். வெளியூர் மக்கள் யாரையும் ஊருக்குள் அனுமதிப்பதில்லை. இதை கண்காணிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
உள்ளூரிலேயே விளைந்த உணவுப் பொருட்களைத் தான் பெரும்பாலும் உண்டு வருகின்றனர். மற்றொரு முக்கியமான விஷயம், இந்த கிராமத்திற்கு செல்ல சரியான சாலை வசதிகள் ஏதும் இல்லை. இருந்த ஒரேவொரு சாலையும் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. இது கொரோனா பாதிப்பை தடுக்கும் மிகப்பெரிய அரணாக விளங்குகிறது. மேலும் மருந்துகள், அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்காக மட்டும் வெளியே வருகின்றனர்.
மீண்டும் ஊர் திரும்பிய உடன் சில நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதலை கடைபிடிக்கின்றனர். கொரோனா பரிசோதனை, தடுப்பூசி என்ற பெயரில் வரும் சுகாதாரத்துறையினர், லீசார் என யாரையும் ஊருக்குள் அனுமதிப்பது இல்லை. இதேபோன்ற சுய தனிமை, பகுதி வாரியாக, தெருக்கள் தோறும் கட்டுப்பாடுகளை பின்பற்றினால் நிச்சயம் கொரோனா வராமல் தடுக்க முடியும் என்கின்றனர்.