துளசி தான் மூலிகைகளின் ராணி என்று அழைக்கப்படுகிறது. பல பகுதிகளில் துளசி ஒரு புனித தாவரமாக பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் அதன் மருத்துவ குணம் தான். ஏனென்றால் இதில் அவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.
துளசி ஆயுர்வேத சிகிச்சையில் பல வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு மருத்துவ குணங்களையும், ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் பண்புகளையும் துளசி கொண்டுள்ளது. துளசி இலைகளுக்கு புத்துயிர் அளிக்கும் திறன் உள்ளது. உடலின் அழுத்தத்தை சமநிலைப்படுத்தவும் உடலைப் பாதுகாக்கவும் துளசி மிக உதவியாக இருக்கும்.
துளசியில் மன அழுத்த எதிர்ப்பு பண்புகள் இருப்பதாக அறியப்படுகிறது. எனவே நீங்கள் அதை ஒவ்வொரு நாளும் ஒரு தேநீராக எடுத்துக்கொண்டால் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம். மன அழுத்தம் போக்குவதோடு மட்டுமல்லாமல் ஹார்மோன் செயல்பாடுகள், நோயெதிர்ப்பு மண்டல செயல்பாடுகள், மூளை வேதியியல் போன்ற உடலின் பல்வேறு செயல்பாடுகளையும் சீர்படுத்த இது உதவியாக இருக்கும்.
துளசி தேநீர் தயார் செய்வது எப்படி?
துளசி தேநீர் தயார் செய்ய ஒரு கப் தண்ணீர் மற்றும் கொஞ்சம் காய்ந்த துளசி இல்லை அல்லது ஃப்ரெஷாக பறித்த துளசி இலைகள், பூக்களை எடுத்துக்கொள்ளுங்கள்.
செய்முறை:
ஒரு கப் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்ததும் அடுப்பிலிருந்து இறக்கி, துளசி இலைகளை இன்னொரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் இந்த கொதிக்கும் நீரைச் சேர்க்கவும். பிறகு, கொஞ்சம் நேரத்திற்கு பாத்திரத்தை மூடி வைத்துவிடுங்கள். ஒரு 15-20 நிமிடங்கள், அந்த தண்ணீரை வடிகட்டவும். வடிகட்டிய துளசி நீரை இப்போது நீங்கள் குடிக்கலாம். சுவை வேண்டுமென்றால் சிறிது தேன் சேர்த்துக்கொள்ளலாம்.