கொழும்பில் நேற்று (நவம்பர் 17) காலை காற்று மாசுபாட்டின் அளவு ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நிலையை எட்டியுள்ளதாக சர்வதேச காற்றுத் தரக் கண்காணிப்பு தளமான IQAir தெரிவித்துள்ளது.
நேற்று காலை சுமார் 8.30 மணியளவில் கொழும்பின் காற்றுத் தரச் சுட்டெண் (Air Quality Index – AQI) 178 ஆகப் பதிவாகியுள்ளது.
இதன்போது, காற்றில் காணப்படும் மிக நுண்ணிய துகள்களான PM2.5 முக்கிய மாசுபடுத்தியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன் செறிவு ஒரு கன மீட்டருக்கு 94.5 மைக்ரோகிராம் எனப் பதிவாகியுள்ளது. அத்துடன், அப்போதைய வெப்பநிலை 28°C ஆகக் காணப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் காற்றுத் தர வகைப்பாட்டின்படி, AQI அளவு 151 முதல் 200 வரை காணப்படுவது ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமற்ற நிலையாகக் கருதப்படுகிறது. இத்தகைய சூழலில் காற்றைச் சுவாசிப்பது பொதுமக்களின் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக, ஏற்கனவே உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு அதிக ஆபத்து ஏற்படலாம்.
இதேவேளை, IQAir வெளியிட்ட மணித்தியால அடிப்படையிலான முன்னறிவிப்பின்படி, காற்றின் தரம் படிப்படியாக மேம்பட்டு, நேற்று மாலை AQI அளவு சுமார் 100 ஆகக் குறையும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
காற்று மாசுபாடு அதிகமாகக் காணப்படும் காலப்பகுதியில், சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்கள் நீண்ட நேரம் வெளிப்புறங்களில் இருப்பதையும், அதிக உடல் உழைப்புடன் கூடிய வெளிப்புறச் செயற்பாடுகளையும் தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், IQAir இன் நேரடி கண்காணிப்புப் பக்கத்தில் கொழும்பு நகருக்கான நான்கு காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவை மூன்று வெவ்வேறு பங்களிப்பாளர்களால் வழங்கப்படும் தரவுகளின் அடிப்படையில் இயங்குகின்றன.
வானிலை மாற்றங்கள் மற்றும் மாசுபாட்டின் அளவைப் பொறுத்து காற்றின் தரம் நாள் முழுவதும் மாறுபடக்கூடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.




