அனுராதபுரத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ருவன்வெலி மகா சேயவிற்கு அருகில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாலங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் மேலும் இரு பௌத்த பிக்குகள், அங்கு ஏற்பட்ட பதற்றமான சூழலைத் தொடர்ந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராமன்ன நிகாயவின் ஒழுக்காற்று விசாரணையைத் தொடர்ந்து அண்மையில் துறவறத்திலிருந்து நீக்கப்பட்ட ராஜங்கனயே சத்தாரத்தன என்பவர் தலைமையிலான குழுவினருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பிக்குகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்தே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இந்த மோதலின் போது, ராஜங்கனயே சத்தாரத்தன தடியால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், பிக்குகள் உண்ணாவிரதப் போராட்டத்திற்காக அமைத்திருந்த கூடாரத்தை அகற்ற முயன்றனர். இதனால் அங்கு மீண்டும் மோதலும் பதற்றமும் அதிகரித்த நிலையில், அந்த மூன்று பிக்குகளும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
அனுராதபுர புனித நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்தும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை பிக்குகள் ஆரம்பித்திருந்தனர்.




