இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் மற்றும் பாரிய வாகன விபத்துகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இலங்கை பொலிஸார் புதிய நடவடிக்கையொன்றை முன்னெடுத்துள்ளனர். இதற்கமைய, போக்குவரத்து விதிகளை மீறி ஆபத்தான முறையில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க பொதுமக்களின் உதவியைப் பொலிஸார் கோரியுள்ளனர்.
வேகக்கட்டுப்பாட்டை மீறுதல், கவனக்குறைவாக வாகனம் செலுத்துதல் மற்றும் ஏனைய வீதிப் பயனர்களின் பாதுகாப்பைப் பொருட்படுத்தாமல் செயற்படுதல் போன்றவை விபத்துகள் அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்களாகப் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன், வாகனங்களில் சட்டவிரோதமான முறையில் ஆபத்தான மேலதிக உபகரணங்களைப் பொருத்துவதால், அவற்றில் பயணிப்பவர்களும் ஏனைய வீதிப் பயனர்களும் பல்வேறு ஆபத்துகளையும் அசௌகரியங்களையும் எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற வாகன விபத்துகள் தொடர்பான விசாரணைகளில், நவீனமயப்படுத்தப்பட்ட பேருந்துகள் உள்ளிட்ட பல பேருந்துகள் முறையான வாகனத் தகுதிச் சான்றிதழ்கள் இன்றியே பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
பொதுமக்கள் முறைப்பாடு செய்ய விசேட WhatsApp இலக்கங்கள் அறிமுகம்!
ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தும் சாரதிகள் தொடர்பான காணொளிகளைப் பொதுமக்கள் நேரடியாகப் பொலிஸாருக்கு அனுப்புவதற்காக விசேட WhatsApp இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, இவ்வாறான போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான காணொளிகளை 070 475 5600 என்ற WhatsApp இலக்கத்திற்கு அனுப்ப முடியும்.
மேலும், வீதிகளில் பயணிக்கும்போது அதிகளவில் புகையை வெளியேற்றும் வாகனங்கள் தொடர்பாகவும் முறைப்பாடு செய்ய முடியும்.
இதற்காக, வாகனத்தின் பதிவு இலக்கத் தகடு தெளிவாகத் தெரியக்கூடிய வகையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அல்லது காணொளிகளுடன், சம்பவம் இடம்பெற்ற திகதி மற்றும் இடம் ஆகிய விபரங்களையும் இணைத்து 070 350 0525 என்ற WhatsApp இலக்கத்திற்கு அனுப்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அவசர முறைப்பாடுகளுக்கான தொடர்பு இலக்கங்கள்:
- பொலிஸ் அவசர அழைப்பு – 119
- கொழும்பு மாவட்ட அவசர அழைப்புப் பிரிவு – 0112 433 333
- தேசிய போக்குவரத்து ஆணைக்குழு – 1955
வீதிப் பயணிகளின் உயிர்களைப் பாதுகாப்பதையும், வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு தொடர்ச்சியான வாகனச் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், போக்குவரத்துச் சட்டங்களை மீறுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், அனைத்து சாரதிகளும் வாகன உரிமையாளர்களும் பொறுப்புடன் செயற்பட்டு நடைமுறையிலுள்ள போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.




