ஜப்பானில் வசித்து வந்த இலங்கை சமூக ஊடகப் பிரபலமான நயோமி (Nayomichan), பிரசவத்தின்போது ஏற்பட்ட மருத்துவச் சிக்கல் காரணமாக உயிரிழந்த சம்பவம் இலங்கை மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆஷா நயோமி வீரவர்தன (Asha Nayomi Weerawardhana) என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், ‘Nayomichan’ என்ற பெயரில் YouTube, TikTok உள்ளிட்ட சமூக ஊடகத் தளங்களில் பிரபலமடைந்திருந்தார். ஜப்பானிய கணவருடன் இணைந்து தனது அன்றாட வாழ்க்கை, கலாசார வேறுபாடுகள், உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் ஜப்பானில் கல்வி கற்கும் அனுபவங்கள் தொடர்பான காணொளிகளைப் பகிர்ந்து வந்தார்.
இந்நிலையில், கடந்த நவம்பர் 10ஆம் திகதியளவில் இவரது மரணம் தொடர்பான செய்திகள் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கின.
முதலில் இவரது மரணம் தொடர்பாகப் பல்வேறு ஊகங்களும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் வெளியாகியிருந்த நிலையில், அவரது சகோதரி அயேஷா வீரவர்தன வெளியிட்ட காணொளி மூலம் மரணம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளிப்படுத்தப்பட்டன.
அவரது சகோதரி தெரிவித்த தகவல்களின்படி, பிரசவத்தின்போது அம்னியோட்டிக் திரவம் (Amniotic Fluid) தாயின் இரத்த ஓட்டத்திற்குள் சென்றதால் ஏற்பட்ட தீவிர மருத்துவச் சிக்கலே உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்துள்ளது.
இதனால் இருதய மற்றும் இரத்த ஓட்டச் செயல்பாடுகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டதாகவும், மருத்துவர்கள் அவசர சிகிச்சைகளை மேற்கொண்டு குழந்தையைப் பிரசவிக்கச் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், மருத்துவக் குழுவினர் மேற்கொண்ட முயற்சிகளையும் மீறி நயோமியின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை என அவரது சகோதரி குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம், அம்னியோட்டிக் திரவ எம்பொலிசம் (Amniotic Fluid Embolism – AFE) எனப்படும் அரிதானதும் உயிருக்கு ஆபத்தானதுமான பிரசவச் சிக்கலுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என மருத்துவ ரீதியாகக் கருதப்படுகிறது.
குழந்தையின் நிலை
இந்தத் துயரச் சம்பவத்திற்கு மத்தியில், நயோமி ஆண் குழந்தை ஒன்றைப் பிரசவித்துள்ளதாகவும், அந்தக் குழந்தை உயிர் பிழைத்துள்ளதாகவும் அவரது சகோதரி தெரிவித்துள்ளார்.
குழந்தை மற்றுமொரு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்ததாகவும், அதன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
குடும்பத்தினரின் கோரிக்கை
நயோமியின் மரணத்தைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பரவி வரும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தொடர்பாக அவரது குடும்பத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக, தடுப்பூசி, மருந்து ஒவ்வாமை மற்றும் மருந்து அதிகளவில் உட்கொண்டமை போன்ற காரணங்களைக் குறிப்பிட்டு வெளியாகும் தகவல்களை நம்ப வேண்டாம் என அவரது சகோதரி பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், நயோமியின் பெயரைப் பயன்படுத்தி குடும்பத்தினரின் அனுமதியின்றி நிதி சேகரிப்பில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
நயோமியின் இறுதிக்கிரியைகள் ஜப்பானிலேயே நடைபெறவுள்ளதாகவும், அவரது உடல் இலங்கைக்குக் கொண்டுவரப்படாது எனவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இலங்கையில் ஏழு நாள் மத வழிபாட்டு நிகழ்வொன்றை ஏற்பாடு செய்யவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் மற்றும் சமூகப் பிரமுகர்களின் இரங்கல்
நயோமியின் மறைவுக்கு இலங்கையின் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பெண்களின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் சமூகப் பொறுப்புணர்வு தொடர்பான விடயங்களைத் தனது சமூக ஊடகச் செயற்பாடுகள் மூலம் வெளிப்படுத்தியவர் என அமைச்சர் அவரை நினைவுகூர்ந்துள்ளார்.
ஜப்பானில் தனது வாழ்க்கைப் பயணத்தைப் பகிர்ந்து ஆயிரக்கணக்கான இலங்கை மக்களின் கவனத்தைப் பெற்றிருந்த இளம் சமூக ஊடகப் பிரபலத்தின் திடீர் மறைவு, அவரது ரசிகர்கள் மற்றும் இலங்கைச் சமூகத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை, அவரது குடும்பத்தினரின் துயரத்தைக் கருத்திற்கொண்டு உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




