இலங்கை கடற்படையினர் நேற்று (09) புத்தளம், உச்சமுனைக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடல் வழியாக இந்தியாவுக்குக் கொண்டு செல்லப்படவிருந்த எட்டு ஆடுகளுடன், சந்தேகத்திற்குரிய இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
வடமேற்கு கடற்படை கட்டளைத் தளத்திற்கு உட்பட்ட இலங்கை கடற்படை கப்பல் (SLNS) ‘விஜயா’வின் பணியாளர்கள், புத்தளம், உச்சமுனைக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றைக் கண்டறிந்து, அதனைச் சோதனையிட்டனர்.
இந்தச் சோதனையின் போது, முறையான அனுமதியின்றி சட்டவிரோதமாகக் கடல் வழியாகக் கொண்டு செல்லப்பட்ட எட்டு ஆடுகளுடன், சந்தேகத்திற்குரிய இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள் இருவர், படகு மற்றும் ஆடுகள் ஆகியவற்றை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கற்பிட்டி பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.




