செம்மணி சிந்துபாத்தி இந்து மயானத்தில் கடந்த 110 நாட்களாக நடந்த அகழ்வுப்பணிகள் தொடர்பான இடைக்கால அறிக்கை வெளியாகியுள்ளது. மிகச்சிலர் எதிர்பார்த்ததை போலவும், மிகப்பெரும்பாலானவர்கள் எதிர்பாராத விதமாகவும் அந்த அறிக்கை அமைந்திருப்பதை, கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்கள் வாயிலாக உணர முடிகிறது.
செம்மணி சிந்துபாத்தி மயான அகழ்வு இடைக்கால அறிக்கையில்- அது ஒரு மனிதப்புதைகுழி, யாழ்ப்பாணத்தில் 1996 காலகட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மொத்தமாக அங்குதான் புதைக்கப்பட்டார்கள் என குறிப்பிடப்படும், அதை தொடர்ந்து, பல தென்னிலங்கை ஆட்சியாளர்களும், இராணுவத்தளபதிகளும் சர்வதேச நீதிமன்ற தூக்குமேடைக்கு கொண்டு செல்லப்படுவார்கள் என பெரும்பாலான தமிழ் மனப்போக்கு கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது.
ஆனால், யதார்த்தம் வேறு விதமாக அமைந்து விட்டது. இந்த யதார்த்தத்தை தமிழ் சூழலால் எதிர்கொள்ள முடியவில்லை. அகழ்வு பணியில் ஈடுபட்ட பேராசிரியர் ராஜ் சேமதேவா, தொல்லியலாளர் அனுஷா வன்னிநாயக்க ஆகியோர் சிங்களவர்கள், அவர்கள் மூலம் அரசாங்கம் “விளையாட்டு காட்டிவிட்டது“ என பெரும்பாலான தமிழர்கள் நம்பும் நிலைக்கு சென்றுள்ளார்கள்.
இது தமிழ் அரசியல் சூழலின் மிகப்பெரிய வீழ்ச்சியும், அவலமும் ஆகும்.
2006 அல்லது 2007 ஆம் ஆண்டுகளில் ஒரு முறை கிளி பாதர் (அருட்தந்தை கருணாரட்ணம் அடிகளார்) இந்த கட்டுரையாளரிடம் “விடுதலையின் பெயரால் எமது கண்களும், நாவும் கட்டப்பட்டுள்ளது. அது போல நீரும் இருக்கப் பழகும்“ என்றார்.
இதுதான் தமிழ் சூழலின் மிகப்பெரிய சிக்கலாக அமைந்துள்ளது. ஒரு விடயம் பொய்யென தெரிந்தாலும், அது பொய்யென நம்புவது அல்லது உண்மையை பேசாமல் விடுவது இனத்திற்கு நல்லதென தமிழ் சூழலில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதைதான் மிக எளிதாக “தேசியத்திற்காக“ என சொல்கிறார்கள்.
செம்மணி புதைகுழி அகழ்வு பணியில் ஈடுபட்ட சிலருடன் சில மாதங்களின் முன்னர் பேசும்போதே, அது மனிதப்புதைகுழி அல்லவென உறுதியாக நம்பினார்கள். தனிப்பட்ட உரையாடல்களில் அதை குறிப்பிட்டார்கள். ஆனால், அதை பகிரங்கமாக குறிப்பிட தயாராக இருக்கவில்லை. அப்படி குறிப்பிட்டால் தமிழ் சூழலில் தம்மை துரோகியாக்கி விடுவார்கள், இடைக்கால அறிக்கையில் அல்லது இறுதி அறிக்கையில் அதன் உண்மைத்தன்மை வெளிவரும் தானே என்று கூறிக்கொண்டிருந்தார்கள்.
இரண்டு சிங்கள கல்வியாளர்களின் பெயரில் அறிக்கை வந்ததால், அகழ்வு பணியில்பங்கேற்ற பிற தமிழ் உத்தியோகத்தர்கள் தப்பித்தனர்.
இடைக்கால அறிக்கையில்- பேராசிரியர் ராஜ் சேமதேவா, தொல்லியலாளர் அனுஷா வன்னிநாயக்க ஆகியோரின் பெயர்களை பார்த்ததும் தமிழர்கள் கொதித்துப் போய்விட்டார்கள். ஆனால், தடயவியல் அகழ்வாராய்ச்சியில் நிபுணத்துவம் மிக்க தமிழர்கள் தற்போது யாருமில்லையென்ற கசப்பான உண்மையை தமிழர்கள் புரிந்துகொள்வதில்லை. (இலங்கையில் தடயவியல் அகழ்வாராய்ச்சியில் ஈடுபடத்தக்க ஒரேயொரே நிபுணத்துவம் மிக்கவர் ராஜ் சோமதேவ மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது)
ஈழத்தமிழர்கள் தம்மை யூதர்களுடன் ஒப்பிடும் வேடிக்கையை குறிப்பிட வேண்டிய இடமிது. உலகெங்கும் பரந்திருந்த யூதர்கள் 1880 களிலிருந்து தாயகம் திரும்புதல் என்பதை அரசியல் இயக்கமாகவே முன்னெடுத்தார்கள். இதனால் சமூகத்திற்கு தேவையான எல்லாவித கல்வியாளர்களும் இஸ்ரேலில் ஒன்றுசேர்ந்து, இன்று உலகின் குறிப்பிடத்தக்க இராணுவ வல்லரசாக இஸ்ரேல் உருவெடுத்துள்ளது. மறுவளமாக, தமிழர்கள் “வெளிநாடு செல்வதை“ வாழ்க்கையின் அங்கமாக கொண்டதால், இலங்கையில் தடயவியல் அகழ்வை செய்யவும் ஒரு துறைசார் நிபுணர் உருவாக முடியவில்லை.
செம்மணி சிந்துபாத்தி மயானத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் மனிதப்புதைகுழிக்கான சான்றுகளை காண்பிக்கவில்லையென்பதே ஆரம்பக்கண்டுபிடிப்புக்கள். அதாவது அவர்கள் சுடப்பட்டு, வெட்டப்பட்டு, அடித்துக் கொல்லப்படவில்லையென புரிந்துகொள்ளலாம். மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளில் அதற்கான சான்றுகள் எவையும் இல்லை. எந்த தடயமும் தெரியக்கூடாதென்பதற்காக இராணுவம் வித்தியாசமாக சிந்தித்து, கடத்திய அனைவருக்கும் விசம் பருக்கி கொன்று புதைத்திருக்கலாம் என யாரும் வித்தியாசமாக சிந்திக்கவும் கூடும். ஆனால் அது தர்க்கரீதியாக வலுவற்றது.
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் மீட்கப்பட்ட எச்சங்களையும், செம்மணி சிந்துபாத்தியில் மீட்ட எச்சங்களையும் ஒப்பிட்டால் நிலைமையை புரிந்துகொள்ளலாம். கொக்குத்தொடுவாயில் உடல்கள் புதைக்கப்பட்ட விதத்தில் அது மனிதப்புதைகுழியென்பது உறுதியானது. ஆனால் செம்மணியில் பெரும்பாலான உடல்கள் முறையாக புதைக்கப்பட்டுள்ளன. தலை நேராக வைக்கப்பட்டு, கைகள் பக்கவாட்டில் வைக்கப்பட்டு புதைக்கப்பட்டுள்ளன. கொல்லப்பட்ட ஒருவரை இராணுவத்தினர் இறுதியஞ்சலி செலுத்தி, முறையாக புதைத்து இருப்பார்களா என்ன?
சிந்துபாத்தி எச்சங்கள் காலத்தால் முந்தியவையாக இருக்க வாய்ப்புள்ளமைக்கு மற்றொரு சான்று- அங்கு குறிப்பிடத்தக்க பிளாஸ்டிக் பொருட்கள் மீட்கப்படவில்லை. 80களில் இருந்து பிளாஸ்டிக் பாவனை பரவலாகி, பெல்ட் உள்ளிட்ட பல பொருட்கள் மனிதப்பாவனையில் அங்கமாகி விட்டன. ஆனால் சிந்துபாத்தியில் அப்படி குறிப்பிடத்தக்கவிதமாக எவையும் மீட்கப்படவில்லை.
அங்கு மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளில் சிறுவர்கள், குழந்தைகளின் எச்சங்கள் மட்டும் 63 வீதமானவை. இராணுவம் சிறுவர்கள், குழந்தைகளை பெருமளவில் குறிவைத்து கடத்தியதா?
சிந்துபாத்தி மயானத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணியில் அடையளம் காணப்பட்ட எலும்புக்கூடுகள், மனிதப்புதைகுழிக்குரியவை என்பதற்கான சான்றுகள் இல்லையென்ற அறிக்கையை முன்வைத்து தமிழ் சூழலின் போதாமைகளை கேள்வியெழுப்பது- வடக்கு, கிழக்கில் மனிதப்புதைகுழிகள் இல்லையென வாதிடுவதாக பொருள் கொள்ளப்படக்கூடாது என்பதையும் குறிப்பிட வேண்டும். இராணுவத்தால் கடத்தப்பட்ட, கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இரகசிய நட்சத்திர விடுதிகளில் தங்கவைக்கப்பட்டிருப்பார்கள் என யாரும் நம்பத் தேவையில்லை. அவர்கள் கொல்லப்பட்டு, புதைக்கப்பட்டிருக்கவே அதிக வாய்ப்புள்ளது. அவர்களின் கதியை அறிய விரும்பும் உறவுகளின் வேதனை புரிந்துகொள்ளப்பட வேண்டியது.
ஆனால், இதில் கவனம் கொள்ள வேண்டியது, செம்மணியில் கிருசாந்தி குமாரசுவாமி மற்றும் உறவினர்கள் கொலை, பின்னர் நடந்த சம்பவங்களை தொடர்ந்து அந்த பகுதியில் 15 பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன. ஆனால், யாழ் குடாநாட்டில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஏராளம். அப்படியானால் அவர்களின் உடல்கள் எங்கே? எத்தனை பேர் காணாமல் ஆக்கப்பட்டார்கள்?
விடுதலைக்காக போராடும் இனமாக தமிழர்கள் இந்த இரண்டு கேள்விகளிற்குமல்லவா விடை கண்டறிந்திருக்க வேண்டும். குடாநாட்டில் 1996 காலகட்டத்தில் இராணுவத்தால் கைதாகி காணாமல் போனவர்கள் எத்தனை பேர் என்பது யாருக்கும் சரியாக தெரியாது. அதை கண்டறிய எந்த தமிழ் அமைப்பும், அரசியல் கட்சியும் முயற்சிக்கவில்லை. யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் எணிக்கையிலும் இதே நிலைதான். இதிதீவிர தமிழ் தேசியவாதியென்றால்- இலட்சக்காணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார் என்றும், சற்றே தீவிரம் குறைந்த தமிழ் தேசியவாதியென்றால்- ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்றும், அரச ஆதரவாளர் என்றால்- மக்கள் அல்ல, புலிகளே கொல்லப்பட்டார்கள் என்றும் அவரவர் விருப்பத்தின்படி நம்பிக் கொண்டிருக்கலாம் என்பதே கசப்பான யதார்த்தம்.
1996 காலகட்டத்தில் இராணுவ முகாம் அமைந்திருந்து, கிருசாந்தி உள்ளிட்டவர்களின் உடல்கள் மீட்கப்பட்ட பகுதியும், செம்மணி சிந்துபாத்தி மயானமும் அருகருகான பிரதேசங்கள் என்றாலும், ஒரேயிடம் அல்ல. இராணுவ முகாமுக்கு அருகில்- கிருசாந்தியின் உடல்கள் மீட்கப்பட்ட பகுதியை உள்ளடக்கி, ஒருமுழுமையான அகழ்வு பணியை தமிழர்கள் கோரியிருக்கலாம். இதுவரை எந்த தமிழ் தரப்பும் அதற்கான முன்முயற்சியை முன்னெடுக்கவில்லை. மாறாக அந்த பகுதியில் ஆளுயர சிவலிங்கத்தை பிரதிட்டை செய்து, “திடீரென தோன்றிய சிவன்“ என புளகாங்கிதப்பட்டுக் கொண்டோம்.
சிந்துபாத்தியில் அகழ்வு ஆரம்பித்ததும் போராட்டம், ஐநா செயலாளரின் கவனத்தை ஈர்க்கிறோம் என மிகப்பெரிய அளப்பறைகள் செய்தோம். தவறான போராட்டங்கள் தவறான பிம்பங்களை உருவாக்கும். சிந்துபாத்தி ஒரு மனிதப்புதைகுழி அல்லவென்பது உறுதியானால்- செம்மணியில் இன்னொரு இடத்தில் மனிதப்புதைகுழி நிச்சயம் இருக்கும். அதை தமிழர்கள் நம்பலாம். ஆனால் சர்வதேச அரங்கில், இந்த “தோண்டித்தோண்டி விளையாடும்“ அரசியல் சலிப்பை ஏற்படுத்தி விடும்.
சிந்துபாத்தி மயானத்தில் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட உடனேயே, நிச்சயமாக அது ஒரு மனிதப்புதைகுழிதான் என தமிழ் சமூகத்தில் மனப்பிம்பம் கட்டியெழுப்பப்பட்டது. அதை ஊடகங்கள், அரசியல் கட்சிகள், சிவில் சமூக குழுக்கள், வெளிநாட்டிலுள்ள அமைப்புக்கள் செய்தன. தமிழ் பொதுப்புத்தியின் நீட்சியான இந்த கூறுகளே அதை செய்தன. தமிழ் பொதுப்புத்தி அதை ஏற்றது.
இந்த இடைக்கால அறிக்கையின் அடிப்படையின் கூட உறுதியான முடிவுக்கு வராமல், இறுதி முடிவின் பின்னரே உறுதியான முடிவுக்கு வரலாம் என்ற போதும், தமிழ் பொதுப்புத்தி எப்பவோ மனிதப்புதைகுழியாக முடிவு செய்துவிட்டது.
எதிலும் சீரியஸ் இல்லாத, ஆழமான அர்ப்பணிப்பு அல்லது உழைப்பை செலுத்த தயாரில்லாத தமிழ் சமூகத்திலிருந்து உருவான கட்சிகள், சிவில் குழுக்கள்- சிந்துபாத்தியை ஒரு மனிதப்புதைகுழியாக சர்வதேச சமூகத்தின் முன்பாகவும் கட்டமைக்க முயன்றன. ஒருவேளை, அது மனிதப்புதைகுழியல்ல என காலப்பரிசோதனைகளிலும் முடிவானால், இதன் அரசியல் விபரீதங்களுக்கு யார் பொறுப்பேற்பார்கள்?
அகழ்வாராய்ச்சியாளர்கள் சிங்களவர்கள் என்பதால் அறிக்கையை மாற்றி விட்டார்கள் என தமிழர்கள் தமக்குள்தாமே நம்பிக் கொண்டிருக்கலாம். ஆனால் அதற்கு எந்த அரசியல் அர்த்தமும், பெறுமதியும் இருக்காதல்லவா.
சிந்துபாத்தி மயான அகழ்வில் பிந்திய நிலவரமாக- ராஜ் சோமதேவ தனது இடைக்கால அறிக்கையில் பெரும் மனிதப்புதைகுழியென்ற சொற்தொடரை திட்டமிட்டு நீக்கிவிட்டார் என சட்டத்தரணிகள் சிலர், யாழ்ப்பாண நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். சிந்துபாத்தி மயானத்தில் ஒரு பெரும் மனிதப்புதைகுழியிருப்பதாக தமிழ் பொதுப்புத்தியில் பதிய வைத்தவர்களில் சில சட்டத்தரணிகளுக்கும் பங்குண்டு. தமிழ் அரசியல் வரலாறு முழுவதும், அப்புக்காத்து அரசியல் எதற்கும் பலனில்லாததாகவே அமைந்துவிட்டது. ஆனால் அப்புக்காத்துக்களும் திருந்தவில்லை. தமிழர்களும் திருந்தவில்லை.
சிந்துபாத்தி மயானத்தில் ஒரு மனிதப்புதைகுழியிருப்பதாக தமிழர்கள் உறுதியாக நம்பிக்கொண்டு, அகழ்வு முடிவுகளும் அப்படியே வர வேண்டுமென அடம்பிடிக்கிறார்கள். ஆனால், சிந்துபாத்தியில் அடையாளம் காணப்பட்டது மனிதப்புதைகுழியா என அறிவியல்ரீதியாக உறுதிசெய்து, அப்படியில்லாவிட்டால் செம்மணியில் உள்ள புதைகுழியை கண்டறிய முயற்சிப்பதுதானே அறிவுடமை. அப்படியொரு முயற்சிக்கே தயாரில்லாத சமூகம், சிந்துபாத்தியில் மீட்கப்பட்டதே மனிதப்புதைகுழியென தன்னைத்தானே நம்பவைத்துக் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம்.
சிந்துபாத்தி அகழ்வில் தற்போதைக்கு எஞ்சியுள்ள சந்தேகங்கள் மிகச்சிலதான். அதிகமான குழந்தைகள், சிறார்கள் ஏன் புதைக்கப்பட்டுள்ளார்கள்? ஆழம் குறைந்த குழிகளில், நெருக்கடியாக ஏன் புதைக்கப்பட்டுள்ளார்கள்?
இந்த சந்தேகத்தை தீர்த்தால், சிந்துபாத்தியில் எந்த மர்மமும் இருக்க வாய்ப்பில்லை. உண்மையில், இந்த அகழ்வு செயல்முறையில், தமிழ் தரப்பினர் உடனடியாக செய்ய வேண்டியது- காபன் பரிசோதனையை கோருவதே. அமெரிக்காவின், புளோரிடாவிற்கு எச்சங்களை அனுப்பி பரிசோதனை முடிவை பெற்றுக்கொள்ளலாம். இதுதான் விஞ்ஞானபூர்வமாக ஒரே அணுகுமுறை. ஆனால், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கங்களின் சார்பில் முன்னலையாகும் சட்டத்தரணிகள் இதுவரை அதை நீதிமன்றத்தில் கோரவில்லை. மாறாக, இடைக்கால அறிக்கையில் செம்மணி புதைகுழியென்ற வார்த்தையில்லையென நகர்த்தல் பத்திரம் சமர்ப்பிக்கிறார்கள். இது புதைகுழியா இல்லையா என்பதை ஆதாரங்களின் அடிப்படையில்தான் நீதிமன்றத்தில் நிரூபிக்கலாமே தவிர, உணர்ச்சிகளின் அடிப்படையில் அல்ல.
உணர்ச்சிகள் ஒரு சமூகத்தின் துயரத்தைப் பிரதிபலிக்கலாமே தவிர, சட்டத்தின் பார்வையில் அது நீதியை நிலைநாட்டுவதற்கான சான்றாக மாறிவிடாது. இந்தப் புதைகுழி விவகாரத்தில் நியாயமும் உண்மையுமே இறுதியில் வெல்ல வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், அந்த உண்மை வெறும் உணர்ச்சிப் பெருக்குகளால் அல்ல, அறிவியல் பூர்வமாகவும் சட்டப்படியாகவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட வேண்டும்.
“சட்டத்தின் பார்வையில், எது நிரூபிக்கப்படவில்லையோ அதற்கு இருப்பே இல்லை.” என்பது புகழ்பெற்ற சட்ட முதுமொழி.
நீதியின் தராசு கண்ணீரின் எடையைக் கண்டு சாய்வதில்லை; அது தாங்கும் அசைக்க முடியாத ஆதாரங்களின் அடிப்படையிலேயே சமநிலை பெறுகிறது.
-யோ.கர்ணன்-




