செம்மணிப் புதைகுழி: தொற்றுநோய் கூற்றுக்குத் தமிழர் புலம்பெயர் செய்தி அமைப்பு கடும் கண்டனம்!

Date:

யாழ்ப்பாணம் செம்மணிப் புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரழிவினால் உயிரிழந்தவர்களுடையதாக இருக்கலாம் என்ற கருத்தை, உறுதியான தடயவியல் ஆதாரங்கள் இன்றி முன்வைப்பது குறித்து தமிழர் புலம்பெயர் செய்தி அமைப்பு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்துகள் பலத்த சந்தேகங்களை எழுப்புவதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. தமிழர் தாயகத்தில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்படுதல், சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் அபாயம் இத்தகைய விளக்கங்களில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

அறிவியல் ஆதாரங்கள் அவசியம்

செம்மணிப் புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தொற்றுநோயால் உயிரிழந்தவர்களுடையவை எனக் கூறுவதற்கு முன்னர், அந்தக் கருத்தை உறுதிப்படுத்தும் தடயவியல் ஆதாரங்கள் முன்வைக்கப்பட வேண்டும் என அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

டி.என்.ஏ. மற்றும் நோயியல் பரிசோதனைகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டனவா, மனித எச்சங்கள் புதைக்கப்பட்ட விதம் தொற்றுநோயால் உயிரிழந்தவர்களின் அடக்க முறையுடன் ஒத்துப்போகிறதா, இராணுவத்தின் தொடர்பு மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த குற்றச்சாட்டுகள் சுயாதீனமாக விசாரிக்கப்பட்டனவா உள்ளிட்ட கேள்விகளுக்கு நம்பகமான பதில்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளது.

தமிழர்களின் நீதிக்கான போராட்டம்

செம்மணி என்பது வெறும் தொல்லியல் ஆய்விடம் அல்ல எனக் குறிப்பிட்டுள்ள அந்த அமைப்பு, அது காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் வரலாற்றையும், அவர்களின் குடும்பங்களின் துயரத்தையும், நீதி மறுக்கப்பட்ட மக்களின் வலியையும் நினைவூட்டும் இடம் எனத் தெரிவித்துள்ளது.

பல தசாப்தங்களாகத் தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காகத் தமிழ்க் குடும்பங்கள் நீதியைக் கோரி வருகின்றன. இருப்பினும், அவர்களின் கோரிக்கைகளுக்குப் போதிய பதில்கள் கிடைக்காமை, விசாரணைகளில் ஏற்படும் காலதாமதம் மற்றும் பொறுப்புக்கூறல் இன்மை ஆகியவை தொடர்வதாகவும் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழர்களின் மரணங்கள் தொடர்பான உண்மைகள் அறிவியல் ஆதாரங்களின்றி மறைக்கப்படுமானால், அது நிறுவனமயமான இனவாதம் மற்றும் நீதி மறுப்பின் தொடர்ச்சியாகவே பார்க்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

தமிழர் இறையாண்மையை மீட்டெடுக்க வேண்டும்

செம்மணிப் புதைகுழி விவகாரம், தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் நீதியை உறுதிப்படுத்துவதற்கான அரசியல் தீர்வின் அவசியத்தை மீண்டும் வெளிப்படுத்துவதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

தமிழர்களின் உயிர், பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்துவதற்குத் தமிழர் இறையாண்மையை மீட்டெடுப்பது அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்தல்

செம்மணிப் புதைகுழி தொடர்பாகச் சுயாதீனமான சர்வதேச தடயவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனத் தமிழர் புலம்பெயர் செய்தி அமைப்பு கோரியுள்ளது.

அத்துடன், தமிழர்கள் தமது அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்கான சர்வதேச மேற்பார்வையிலான சுதந்திரப் பொதுவாக்கெடுப்பை ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா, பிரித்தானியா, கனடா உள்ளிட்ட நாடுகள் ஆதரிக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மக்களது உரிமைகளைப் பறிக்கும் பேரபாயம்: சமத்துவக் கட்சி கடும் கண்டனம்

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மக்களது உரிமைகளைப் பறிக்கும் பேரபாயம்: சமத்துவக் கட்சி...

தலவாக்கலையில் மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகத் தந்தை கைது!

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 39 வயதுடைய நபர் ஒருவர்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்