ரஷ்யா மீதான தடைகள் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டிருந்த கச்சா எண்ணெய், எரிவாயு கொள்முதல் செய்யும் நாடுகள் மீதான தடைகள் மற்றும் சுங்க வரிகளை ரத்து செய்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதனால் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் பொருட்கள் மீது விதிக்கப்படவிருந்த 100 சதவீத வரி நீங்கும்.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போருக்கு எதிராக, ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்க அமெரிக்கா பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது.
அதன் ஒரு பகுதியாக, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்க வழிவகுக்கும் சட்டத்தை அமெரிக்கா கொண்டு வந்தது.
அமெரிக்க செனட் சபையில் முக்கிய பங்கு வகித்த மறைந்த செனட்டர் லிண்ட்சே கிரஹாமின் பெயரில், ‘லிண்ட்சே ஓ. கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் சட்டம் 2026’ என்ற பெயரில் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. கடந்த மாதம் இந்தச் சட்டத்தில் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.
இந்தச் சட்டத்தின்படி, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் முக்கிய நாடுகளான இந்தியா, சீனா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, அஜர்பைஜான் ஆகிய நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவில் 100 சதவீதம் வரை வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.
இந்த வரி விதிப்பு நடவடிக்கைகள் xக்டோபர் 18 ஆம் திகதி (நேற்று) முதல் அமலுக்கு வர இருந்தன. இந்நிலையில், அமெரிக்காவின் தேசிய நலன் கருதி இந்தச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட வேண்டிய பல்வேறு பொருளாதாரத் தடைகள், வர்த்தகக் கட்டுப்பாடுகள் மற்றும் வரிகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஜனாதிபதி ட்ரம்பின் இந்த உத்தரவால் சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பொருட்களுக்கு வரி விதிக்கப்பட வாய்ப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது.
ரஷ்யா மீதான தடைகளை அமெரிக்கா ரத்து செய்துள்ளதை ரஷ்ய ஜனாதிபதியின் தூதுவரும், பொருளாதார ஆலோசகருமான கிரில் திமிட்ரியேவ் வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “ரஷ்யா மீதான தடைகளை நீக்குவதற்கு அமெரிக்க அதிபர் உத்தரவிட்டிருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும்.
தடை விதிக்கும் சட்டத்தை நிறுத்தி வைத்திருப்பதை நாங்கள் வரவேற்கிறோம். தடைகள் விதித்து மோதல் ஏற்படுவதற்குப் பதிலாகப் பேச்சுவார்த்தை நடத்தி, இரு தரப்புக்கும் பயனளிக்கும் வகையில் ஒத்துழைப்புடன் நடந்து கொள்வது அவசியம். உலகளாவிய நிலைத்தன்மைக்கு இரு நாடுகளின் கூட்டுப் பொறுப்பும் தேவை” என்றார்.




