பிரபஞ்சத்தில் நிகழும் தீவிரமான நிகழ்வுகளிலிருந்து உருவாகும் உயர் ஆற்றல் கொண்ட நியூட்ரினோ துகள்களைக் கண்டறிந்ததற்கும், ஐஸ்கியூப் நியூட்ரினோ ஆய்வக உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியதற்கும் அமெரிக்காவின் விஸ்கான்சின் – மாடிசன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பெல்ஜியம் விஞ்ஞானி பிரான்சிஸ் ஹால்சனுக்கு 2026-ம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐஸ்கியூப் நியூட்ரினோ ஆய்வகத்துக்கு ஆற்றிய முக்கிய பங்களிப்புகள் மற்றும் உயர் ஆற்றல் கொண்ட நியூட்ரினோக்களைக் கண்டறிந்ததற்காக பிரான்சிஸ் ஹால்சனுக்கு 2026-ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்க ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமி முடிவு செய்துள்ளது.
நியூட்ரினோக்கள் இயற்கையில் மிக அதிக அளவில் காணப்படும் துகள்களில் ஒன்றாகும். ஆனால், அவற்றை கண்டறிவது மிகவும் கடினமான காரியமாகும். நியூட்ரினோக்களுக்கு மின்சுமை ஏதுமில்லை. மேலும் இவை பருப்பொருட்களுடன் மிகக் குறைந்த அளவே வினைபுரிகின்றன. ஒவ்வொரு வினாடியும் கோடிக்கணக்கான நியூட்ரினோக்கள் நம் உடலின் வழியாக எந்தவிதமான தடயத்தையும் விட்டுச் செல்லாமல் கடந்து செல்கின்றன.
இருப்பினும், வினைபுரியும் தன்மை குறைவாக இருக்கும் அத்தகைய பண்பே நியூட்ரினோக்களை வானியலாளர்களுக்கு மிகவும் மதிப்புமிக்கதாக மாற்றுகிறது. காந்தப்புலங்களால் திசைதிருப்பப்படக்கூடிய மின்னூட்டம் கொண்ட துகள்களைப் போலன்றி, உயர் ஆற்றல் கொண்ட நியூட்ரினோக்கள் பிரபஞ்சத்தில் மிகப்பெரிய தொலைவுளுக்கு ஏறக்குறைய நேர்கோட்டில் பயணிக்கக்கூடியவை. மேலும் அவை தாங்கள் உருவான இடத்தைப் பற்றிய தகவல்களைத் தன்னுள் கொண்டு செல்கின்றன. எனவே, பிரபஞ்சத்தின் மிகத் தீவிரமான சூழல்களிலிருந்து வரும் தூதுவர்களாக இவை செயல்பட முடியும்.
ஹால்சன் 1988-லேயே ஒரு துணிச்சலான தீர்வை முன்மொழிந்தார். தென் துருவத்திற்கு அடியில் உள்ள மிகப்பெரிய, ஒளி ஊடுருவக்கூடிய பனிப்பரப்பை ஒரு துகள் கண்டறியும் கருவியாகப் பயன்படுத்துவதே அந்தத் தீர்வாகும். உயர் ஆற்றல் கொண்ட நியூட்ரினோ ஒன்று எப்போதாவது பனிக்கட்டிக்குள் உள்ள அணுக்கருவுடன் மோதும்போது, அந்த வினையானது ஒரு ஒளிக்கீற்றை உருவாக்கக்கூடும்.
ஐஸ்க்யூப், அண்டார்டிக் பனியின் ஆழத்தில் பதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஒளி உணரிகளைப் பயன்படுத்தி, இந்த மிகச்சிறிய ஒளிக்கீற்றுகளைக் கண்டறிந்து, நியூட்ரினோவின் பாதை மற்றும் ஆற்றலை மீண்டும் கட்டமைக்கிறது.
ஐஸ்க்யூப்பைக் கட்டுவதற்குப் பல ஆண்டுகள் ஆனது. இந்த ஆய்வகம் 2011-ல் கட்டி முடிக்கப்பட்டது. அதன்பின்னர் சுமார் ஒரு கன கிலோமீட்டர் பனிப்பரப்பை உள்ளடக்கிய இந்த ஆய்வகத்தில், விஞ்ஞானிகள் உயர் ஆற்றல் நியூட்ரினோக்களைக் கண்டறியத் தொடங்கினர்.
மேலும் அதைத் தொடர்ந்த ஆய்வுகள், இந்தத் துகள்களில் சில நமது சூரிய மண்டலத்திற்கு அப்பால் வெகு தொலைவில் இருந்து உருவானவை என்பதற்கான ஆதாரங்களை வழங்கின. அந்தக் கண்டுபிடிப்பு, பிரபஞ்சத்திற்குள் ஒரு புதிய பாதையை திறந்தது, அதுவே நியூட்ரினோ வானியல் என அழைக்கப்படுகிறது.
“ஃபிரான்சிஸ் ஹால்சன், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொறியாளர்களைக் கொண்ட ஒரு சர்வதேசக் குழுவை வழிநடத்தி, நமக்கு ஒரு அற்புதமான கருவியை வழங்கியுள்ளார்” என்று இயற்பியலுக்கான நோபல் குழுவின் தலைவர் மார்க் பியர்ஸ் கூறினார். அவரது அறிவியல் பார்வை, ஒரு புதிய வகை வானியலுக்கு வழி வகுக்க உதவியது என்றும் பியர்ஸ் கூறினார்.
ஐஸ்க்யூப் இன்றும் நியூட்ரினோ இடைவினைகளைத் தொடர்ந்து சேகரித்து வருகிறது. வளர்ந்து வரும் இந்தத் தரவுத்தொகுப்பு, இந்த தீவிரத் துகள்களை உருவாக்கும் அண்ட மூலங்களைக் கண்டறியவும், பிரபஞ்சத்தில் இதுவரை அறியப்படாத நிகழ்வுகளை வெளிப்படுத்தவும் உதவும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
எனவே, இந்த நோபல் அங்கீகாரம் ஒரு மர்மமான துகள் சமிக்ஞையின் கண்டுபிடிப்புக்கானது. இது, ஒளியைக் கொண்டு அல்லாமல், பிரபஞ்சத்தில் கிட்டத்தட்ட தீண்டப்படாமல் பயணிக்கக்கூடிய துகள்களைக் கொண்டு அண்டத்தைப் பார்க்கும் ஒரு புதிய வழியை கண்டறியும் முயற்சிக்கான அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.
முன்னதாக நேற்று அமெரிக்கா மற்றும் ஜெர்மனியை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவை சேர்ந்த கார்ல் டீசெரோத் (54) மற்றும் ஜெர்மனியை சேர்ந்த பீட்டர் ஹெகேமன் (71), ஜோர்ஜ் நாகல் (73) ஆகியோருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டு உள்ளது.




