ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட, பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவருமான ரஞ்சித் குமார (எ) “கொண்ட ரஞ்சி” (Konda Ranji), மேல் மாகாண வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்; மேலும் அவரது குற்றச் செயல்கள் குறித்த விரிவான விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.
டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்டு நேற்று (09) நாட்டிற்கு வந்த “கொண்ட ரஞ்சி”, விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் (CID) கைது செய்யப்பட்டு, மேல் மாகாண வடக்கு பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) சட்டத்தரணி கலிங்க ஜயசிங்கவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
“கொண்ட ரஞ்சியின்” பாதாள உலகச் செயல்பாடுகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகள் ஜா-எல மற்றும் கந்தான பகுதிகளை மையமாகக் கொண்டிருந்ததால், விசாரணையை எளிதாக்கும் வகையில் அவரை மேல் மாகாண வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்க DIG கலிங்க ஜயசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார். டுபாய் அதிகாரிகள் அவரை முதலில் கடந்த ஜனவரி மாதம் கைது செய்தனர்; போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்றபோது டுபாய் பொலிஸாரால் அவர் பிடிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் விடுவிக்கப்பட்டாலும், ஈரான் ஐக்கிய அரபு அமீரகம் மீது நடத்திய ட்ரோன் தாக்குதல் காட்சிகளைப் படம்பிடித்து சமூக ஊடகங்களில் பகிர்ந்ததற்காக மார்ச் மாதத்தில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
அவர் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தர்ப்பங்களிலும், இலங்கையின் பாதுகாப்பு மற்றும் ராஜதந்திர முகமைகள் விடுத்த தொடர்ச்சியான கோரிக்கைகளைத் தொடர்ந்து அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜூலை 3, 2025 அன்று கந்தான பொதுச் சந்தைக்கு அருகில், முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் ஒருங்கிணைப்புச் செயலாளரான சமீர மனஹாரவை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை ‘கொண்ட ரஞ்சி’ திட்டமிட்டு நடத்தியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இச்சம்பவத்தில் காரில் இருந்த ஒருவர் உயிரிழந்ததுடன், சமீர மனஹார காயமடைந்தார்.
ஏப்ரல் 2026 இல், கணேமுல்ல பகுதியில் 12 கிலோகிராமிற்கும் அதிகமான ‘ஐஸ்’ மற்றும் 10 கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். அந்தச் சம்பவத்துடனும் ‘கொண்ட ரஞ்சி’யின் பெயர் தொடர்புபடுத்தப்பட்டது.
பொலிஸ் அதிகாரிகளுக்கும் ‘கொண்ட ரஞ்சி’க்கும் இடையிலான தொடர்புகள் குறித்தும் விசாரணை நடக்கிறது. இது தொடர்பான நபர்கள் மீதான விசாரணைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
டுபாயில் தங்கியிருந்தபோது ‘கொண்ட ரஞ்சி’ தங்க நகைகளை அணிந்திருந்தார். இருப்பினும், அவர் நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டபோது அந்தத் தங்க நகைகள் எதுவும் அவரிடம் இருக்கவில்லை.




