நயினாதீவு கடற்பகுதியில் சிறுயரக படகு கவிழ்ந்து விபத்து – அனைத்துப் பயணிகளும் பத்திரமான மீட்பு!
…..
நயினாதீவிலிருந்து நெடுந்தீவுக்குச் சென்ற சிறுயரகப் படகொன்று நயினாதீவை அண்மித்த கடற்பகுதியில் இன்று மாலை (16) கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
எனினும், குறித்த விபத்தில், படகில் பயணித்த அனைவரும் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஞாயிற்றுக்கிழமையான இன்று (16), நெடுந்தீவுக்கான இறுதிப் பிரதான போக்குவரத்துப் படகு சேவை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, குறிகாட்டுவான் இறங்குதுறையில் நெடுந்தீவு செல்வதற்காகக் காத்திருந்த சில பிரயாணிகளை ஏற்றியவாறு குறித்த சிறுயரகப் படகு மாலை 3.30 மணியளவில் நயினாதீவிலிருந்து புறப்பட்டுள்ளது.
இவ்வாறு புறப்பட்ட படகு, மாலை 3.45 மணியளவில் நயினாதீவு கடற்பகுதியில் திடீரென விபத்துக்குள்ளாகி கவிழ்ந்துள்ளது.
விபத்து நேர்ந்தவேளை குறித்த படகில் 10 பயணிகள் பயணித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவராத நிலையில், கடற்படையினரின் மற்றும், மீனவர்களின் விரைவான நடவடிக்கையால் பயணிகள் அனைவரும் எவ்வித ஆபத்துமின்றி மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட அனைவரும் நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.




