போதைப்பொருள் ஒழிப்புக்கு முழுமையான சமூகப் பணி அணுகுமுறை அவசியம் – ரஷாத்

Date:

போதைப்பொருள் பாவனையாளர்களை வெறுமனே குற்றவாளிகளாகவோ அல்லது பிரச்சினைக்குட்பட்ட நபர்களாகவோ பார்க்காமல், அவர்களின் முழுமையான வாழ்க்கைச் சூழலை கருத்தில் கொண்டு தலையீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எம்.ஜி.பி.எம். ரஷாத் தெரிவித்துள்ளார்.

தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் இறுதியாண்டு பயிற்சி மாணவர்களான ஏ.என். அஹமட் அத்னாப், எம்.கே.எப். சனா அப்ரி மற்றும் ஆர்.எம். ஹஸ்ஸான் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்ட சமூகப்பணி தலையீட்டு முயற்சி வேலைத்திட்டம் தொடர்பாக உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் போதைப்பொருள் எதிர்ப்பு “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயல் திட்டத்தின் தேசிய செயற்குழு உறுப்பினராக தாம் செயற்பட்டு வருவதாகவும், அதன் அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதியுடன் ஒரே மேடையில் உரையாற்றியதையும் தமக்குக் கிடைத்த பெரும் பாக்கியமாக கருதுவதாகவும் கூறினார்.

ஒவ்வொரு மாதமும் நடைபெறும் தேசிய செயற்குழுக் கூட்டங்களில் ஜனாதிபதி தொடர்ந்து வலியுறுத்தி வரும் முக்கிய அம்சம், அரச சேவைகளின் இறுதிப் பயன் பொதுமக்களை நேரடியாகச் சென்றடைய வேண்டும் என்பதோடு, மக்களை தனித்த பிரச்சினைகளின் அடிப்படையில் அல்லாது, அவர்களது சமூக, பொருளாதார, குடும்ப மற்றும் உளவியல் தேவைகளுடன் அணுக வேண்டும் என்பதாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.

“சமூகப் பணியில் இதனை முழுமையான அணுகுமுறை என அழைக்கின்றோம். போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான ஒருவருக்கு போதைப்பொருள் பிரச்சினை மட்டுமல்லாது, பொருளாதார நெருக்கடி, குடும்ப சிக்கல்கள், சமூகத் தடைகள், தொழில் வாய்ப்பு குறைபாடுகள், ஆன்மீக மற்றும் கல்விசார் பிரச்சினைகளும் இருக்கலாம். ஆகவே ஒரு பிரச்சினையை மட்டும் தீர்ப்பதன் மூலம் அவரை முழுமையாக மாற்ற முடியாது,” என ரஷாத் விளக்கமளித்தார்.

அவர் மேலும், இத்தகைய நபர்களை ஒரு முழுமையான மனிதராகக் கருதி, அவர்களின் அனைத்து தேவைகளையும் கருத்தில் கொண்டு அரச மற்றும் தனியார் துறைகள் இணைந்து சேவைகளை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

முன்னைய பல அரசாங்கத் திட்டங்களில் சமூகப் பணியாளர்களின் பங்களிப்பு மிகக் குறைவாக இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், தற்போதைய அரசாங்கம் சமூகப் பணியாளர்கள், உளவளத் துணையாளர்கள் மற்றும் உளவியல் நிபுணர்களை இணைத்து சமூக மற்றும் உளவியல் தலையீடுகளை முன்னெடுத்து வருவது பாராட்டத்தக்க முன்னேற்றமாகும் என்றார்.

ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் சிறப்பம்சமாக, மக்களின் சிந்தனைகள் மற்றும் உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு, அவர்களது பார்வையில் இருந்து பிரச்சினைகளை அணுகும் பண்பை அவர் பாராட்டினார்.

இம்முறை முன்னெடுக்கப்படும் திட்டம் ஒரு முன்னோடி (Pilot Project) முயற்சி எனக் குறிப்பிட்ட ரஷாத், அதன் பெறுபேறுகள் மற்றும் அனுபவங்களை முறையாக ஆவணப்படுத்தி, எதிர்காலத்தில் தேசிய மட்டத்துக்கு கொண்டு செல்லும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

இதனுடன் தொடர்புபடுத்தி, 2017 ஆம் ஆண்டு சம்மாந்துறையில் தாம் முன்னெடுத்த “சந்தோஷமான குடும்பம்” திட்டத்தின் கீழ் 49 செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு அதன் அறிக்கை அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்டதாகவும், பின்னர் அதே கருத்தாக்கம் தேசிய மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் அவர் நினைவுகூர்ந்தார்.

தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த சமூகப் பணி தலையீட்டு முயற்சியும் எதிர்காலத்தில் நாடு முழுவதும் மக்களுக்கு பயனளிக்கும் தேசியத் திட்டமாக வளர வேண்டும் என்ற எதிர்பார்ப்பை வெளியிட்ட அவர், மாணவர்களின் ஒத்துழைப்புடன் அதனை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார்.

“பொதுமக்கள் மகிழ்ச்சியாகவும், பிரச்சினைகளற்ற வாழ்க்கையை வாழக்கூடியவர்களாகவும் மாற வேண்டும். அவர்களது வாழ்க்கைத்தரம் உயர வேண்டும். அரச சேவைகள் மக்களின் காலடிக்கே சென்று சேர வேண்டும். இதுவே எங்களது இறுதி நோக்கம்” என எம்.எம்.ஜி.பி.எம். ரஷாத் மேலும் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட மூலத்தை எதிர்த்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில்  பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தை தேசிய மக்கள் சக்தி...

ஒரே கிளிக்கில் பரீட்சைத் தரவுகள்: தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய டிஜிட்டல் முயற்சி

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் (CEDPL)...

தமிழ் தேசம் ஜோதிலிங்கம் ஐயாவை இழந்துவிட்டது: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆழ்ந்த இரங்கல்

ஆசிரியர், வழக்கறிஞர், அரசியல் ஆய்வாளர் என்ற எல்லைகளைத் தாண்டித் தமிழ் தேசத்தின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்