ரஷ்யாவின் யூரல்ஸ் மலைத்தொடரில் உள்ள ஒரு தொழில்துறை நகரமான நிஸ்னி டகிலில், உள்ளூர் உணவகம் ஒன்றில் “அடால்ஃப் ஹிட்லர்” என்ற பெயரில் பீட்சா ஓர்டர் செய்ததற்காக, 18 வயதான கல்லூரி மாணவர் திமோஃபி வகோனினுக்கு ஐந்து நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
நாஜி சின்னங்களை ஊக்குவித்ததாகவும், பரப்பியதாகவும் அவர் மீது காவல்துறை குற்றம் சாட்டியுள்ளதாக, அரசுக்குச் சொந்தமான மற்றும் இயக்கப்படும் செய்தி நிறுவனமான ஆர்.ஐ.ஏ நோவோஸ்டி செய்தி வெளியிட்டுள்ளது. அந்த இளைஞர், ஒரு கட்டுமானக் கல்லூரியில் எலக்ட்ரீஷியன் படித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம், நிஸ்னி டகிலில் உள்ள ஒரு உள்ளூர் வணிக வளாகத்திற்குள் இருக்கும் டோடோ பீட்சா கடையில் நிகழ்ந்தது. ஸ்வெர்ட்லோவ்ஸ்க் பிராந்திய சட்டமன்ற உறுப்பினர் அலெக்ஸி ஸ்வாலோவ், டெலிகிராமில் ஒரு தகவலைப் பகிர்ந்தார். போர் வீரரான தனது நண்பர், “அடால்ஃப் ஹிட்லர்” என்ற பெயரில் ஓர்டர் செய்யப்பட்டதைக் கண்டதாக அவர் கூறினார். ஓர்டர் சீட்டில் இருந்த பெயரால் அவர் மிகவும் புண்பட்டதாகக் கூறப்படுகிறது.
“இவை அனைத்தும் SVO-வின் முன்னாள் படைவீரரான என் நண்பர் கண்முன்னே நடந்தன. அந்த நபரின் முகத்தை மேசையில் மோதாமல் அவர் தன்னை எப்படி கட்டுப்படுத்திக் கொண்டார் என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை, ஆனால் இது உங்களுக்கு [சட்ட அமலாக்கத் துறைக்கு] ஒரு மிகத் தெளிவான வழக்கு என்று நான் நினைக்கிறேன். அந்த இளைஞன் ஒளிந்துகொள்ள எந்த முயற்சியும் செய்யவில்லை. ‘நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று நினைக்கிறாய்?’ என்று கேட்டபோது, அவன், ‘நான் போருக்கு எதிரானவன், நான் அதை ஆதரிக்கவில்லை, இதுதான் என் நிலைப்பாடு’ என்று பதிலளித்தான்,” என சாவ்லோவ் டெலிகிராமில் எழுதினார்.
“அந்த உதவியற்ற மாணவன், தான் ஒரு நாஜி அல்ல அல்லது நாஜி ஆதரவாளர் அல்ல என்று கூறினான்,” என உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். தனது செயல்களின் விளைவுகளை அவன் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை என்றும் கூறினான். அந்த அதிகாரி, தங்களது விசாரணையின் போது, அவனது மேசையில் ஒரு “தடைசெய்யப்பட்ட சின்னத்தையும்” கண்டெடுத்தார்; அதை அவன் புகைப்படம் எடுத்து ஒரு ஆன்லைன் அரட்டை மன்றத்தில் பகிர்ந்திருந்தான்.
“அவன் ஒரு வணிக வளாகத்தில் பீட்சா ஓர்டர் செய்யும்போது தன்னை மூன்றாம் ரீச்சின் தலைவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டது மட்டுமல்லாமல், ஆன்லைனிலும் தனது படிக்கும் இடத்திலும் ஸ்வஸ்திகா சின்னத்தைக் காட்டினான்,” என அமைச்சகத்தின் அறிக்கை தெரிவித்தது.
இந்தச் சம்பவத்தைக் கண்காணித்து வந்த காவல்துறை, மறுநாள் அந்த மாணவனை அவனது கல்லூரி வளாகத்தில் கண்டுபிடித்துக் கைது செய்தது. அவன் “கண்ணீரை அடக்க முடியாமல் தவித்ததாகவும்”, தனது செயல்களால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டதாகவும் கூறப்படுகிறது.




