அம்பலாந்தோட்டை தேராப்புத்த தேசிய பாடசாலையின் விளையாட்டு விழா கடந்த மே 21ஆம் திகதி நடைபெற்றபோது, ஒரு மாணவி கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், அப்பள்ளியின் அதிபர், துணை அதிபர் மற்றும் வேறுொரு பாடசாலையைச் சேர்ந்த மாணவன் ஆகிய மூவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பலாந்தோட்டை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் அமில ராஜபக்ஷ தெரிவித்ததாவது, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதன் பின்னர் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகும்.
சம்பவத்தை மறைத்ததாக சந்தேகத்தின் பேரில் அதிபரும் துணை அதிபரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட மூவரும் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும், சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பலரை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் கைபேசியில் காணொளியாக பதிவு செய்யப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.




