மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதான வீதியில் உள்ள நாவற்குடாவில் வீதியின் குறுக்கே உள்ள வடிகானுக்குள் சனிக்கிழமை (13) மாலை 5.30 மணியளவில் இறங்கிய ஒருவர் வடிகானுக்குள் சிக்கிய தையடுத்து இரண்டு மணித்தியால போராட்டத்தின் பின்னர் தீயணைப்பு படையினரால் பாதுகாப்பாக மீட்டார்.
நாவற்குடா கத்தாமரப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள பிரதான வீதியை ஊடறுத்து அமைக்கப்பட்ட வடிகானுக்குள் நேற்று மாலை 5.30 மணியளவில் நபர் ஒருவர் உள் நுழைந்ததை கண்ட பொதுமக்கள் நீண்ட நேரமாகியும் அவர் வெளியில் வராத நிலையில் பொலிசார் மற்றும் தீயணைக்கும் படை பிரிவுக்கு தெரியப்படுத்தினர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு மட்டக்களப்பு மாநகரசபை தீயணைப்புப் படையினரும் காத்தான்குடி பொலிஸாரும் சென்று வடிகானுக்குள் சிக்கியவரை மீட்கும் பணியை முன்னெடுத்தனர்.
இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன் தீயணைக்கும் படையினர் சுமார் 2 மணித்தியாலத்துக்கு மேல் போராட்டத்தின் மத்தியில் இரவு 7.30 மணியளவில் வடிகானுக்குள் சிக்கியவரை பாதுகாப்பாக மீட்டனர்
இவ்வாறு மீட்கப்பட்டவர் அந்த பகுதியைச் சேர்ந்தவர் எனவும் நேற்று முன்தினம் சிறையில் இருந்து விடுதலையானவர் எனவும் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என பொலிசரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
-கனகராஜா சரவணன்-




