தமிழகத்தில் 14.23 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் விதமாக பயிர்க் கடனில் ரூ. 2,044 கோடியை தள்ளுபடி செய்திருக்கிறது தவெக அரசு. ஆனால், தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி விஜய் செய்யவில்லையே என விவசாயிகளும் விவசாய சங்கங்களும் போர்க்கொடி தூக்கி இருக்கின்றன.
பயிர்க் கடன் தள்ளுபடி என்பது திமுக-வுக்கும் அதிமுக-வுக்கும் ஓட்டுக்காக விவசாயிகளை வளைக்கும் ஒரு உத்தி. அதேசமயம், இந்த ‘தள்ளுபடி’ விவகாரத்துக்கு நீண்ட நெடிய வரலாறே இருக்கிறது. விவசாயிகளுக்கு கடன் வழங்கும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் இந்தியா முழுவதும் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக இருக்கின்றன.
இதில்லாமல், சுமார் 900 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் இருக்கின்றன. தமிழகத்தில் சுமார் 4 ஆயிரம் கடன் சங்கங்களும் 24 மத்தியக் கூட்டுறவு வங்கிகளும் உள்ளன. இவற்றின் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.30 ஆயிரம் கோடி வரைக்கும் விவசாயக் கடன்கள் வழங்கப்படுகின்றன.
வாஜ்பாய் ஆட்சியில் கடன் சங்கங்களும் மத்திய கூட்டுறவு வங்கிகளும் கடும் நிதி நெருக்கடியில் தத்தளித்தன. அடுத்து வந்த காங்கிரஸ் ஆட்சியில் வைத்தியநாதன் கமிட்டி அளித்த சிபாரிசின் படி சுமார் 13 ஆயிரம் கோடியை வங்கி மறுசீரமைப்பு நிதியாக மத்திய அரசு அளித்தது. (இதில் சுமார் 1,000 கோடி தமிழகத்துக்கான நிதி). ஆனால், இந்த நிதியை பெறவேண்டுமானால் மாநில அரசுகள் நபார்டு வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.
வங்கி நிர்வாகத்தில் அரசியல்வாதிகளின் தலையீடு, கடன் தள்ளுபடி உள்ளிட்ட விஷயங்களுக்கு செக் வைத்ததால் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. இந்த நிலையில் செக் ஷன் 35 (ஏ)-ன் படி சிவகங்கை மத்தியக் கூட்டுறவு வங்கியை முடக்கியது ரிசர்வ் பேங்க். இது தனது தொகுதிப் பிரச்சினை என்றாலும், “இது ரிசர்வ் பேங்க் எடுத்த நடவடிக்கை” என்று சொல்லி ஒதுங்கினார் சிதம்பரம். இதையடுத்து, “ரூ.19 கோடியை மாநில அரசு செலுத்தினால் வங்கி மீண்டும் செயல்பாட்டுக்கு வரும்” என்றது நபார்டு. ஆனால் ஜெயலலிதா, ரூ.13 கோடியை மட்டும் செலுத்த சம்மதித்தார். நபார்டு இதை ஏற்கவில்லை.
இந்தப் பஞ்சாயத்து ஓராண்டு காலம் இழுபட்ட நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கருணாநிதி முதல்வரானார். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் மூலமாக சிவகங்கை விவகாரம் கருணாநிதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் எடுத்த முயற்சியால் நிதிக்கான உத்தரவாத கடிதத்தை மட்டும் வாங்கிக் கொண்டு சிவகங்கை மத்திய கூட்டுறவு வங்கியை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது நபார்டு. புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் 2006-லேயே கருணாநிதி அரசு கையெழுத்திட்டது.
2006-ல் திமுக அரசு சுமார் 7 ஆயிரம் கோடிக்கான விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தது. எந்த அளவுகோலும் இல்லாமல் அனைவருக்கும் கடன் தள்ளுபடி ஆனதால் பண்ணையார்களும் பலனடைந்தார்கள். தொடர்ந்து 2016-ல் ஜெயலலிதாவும் ரூ.5,318.73 கோடிக்கான விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தார். அதேபோல், எடப்பாடி பழனிசாமியும் 2021 பிப்ரவரியில் 12,110 கோடிக்கான விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்து அறிவித்தார்.
ஆனால், அவரால் அதைச் செய்ய முடியாமல் போனது. அடுத்து ஆட்சிக்கு வந்த ஸ்டாலின் தலையில் அந்தச் சுமை விடிந்தது. 2021 மே மாதம் ரூ.12,110 கோடி பயிக்கடனை முறைப்படி தள்ளுபடி செய்தார் ஸ்டாலின். அத்துடன், ரூ.2,755.99 கோடிக்கான மகளிர் சுய உதவிக் குழு கடன்கள், சுமார் ரூ.6 ஆயிரம் கோடிக்கான நகைக் கடன்கள் ஆகியவற்றையும் ஸ்டாலின் அரசு தள்ளுபடி செய்தது. ஆக, கடன் தள்ளுபடிக்காக மட்டுமே கடந்த ஆட்சியில் சுமார் ரூ.21 ஆயிரம் கோடியை வங்கிகளுக்குச் செலுத்தி இருக்கிறது தமிழக அரசு
விவசாயக் கடன் தள்ளுபடி என்று திமுக, அதிமுக வாக்குறுதி கொடுத்தாலே என்று திமுக, அதிமுக வாக்குறுதி கொடுத்தாலே கூட்டுறவு வங்கியாளர்கள் மிரண்டு போவார்கள். ஏனென்றால், யார் ஆட்சிக்கு வந்தாலும் உடனடியாக கடன் தள்ளுபடி அமலுக்கு வந்துவிடும். ஆனால், அரசிடமிருந்து அதற்கான தொகை உடனடியாக வங்கிகளுக்கு வந்து சேராது. ஐந்தாண்டு காலத்துக்கும் பல தவணைகளாக இழுத்தடித்துத்தான் தருவார்கள். இதனால் வங்கிகள் ஐந்தாண்டுகளுக்கு வரவேண்டிய வட்டி நஷ்டப்பட்டு நிற்கும். இதுதான் கடந்த கால வரலாறு.
இதற்கெல்லாம் கடிவாளம் போடவேண்டும் என்பதற்காகவே, ‘நபார்டு வங்கியின் அனுமதி இல்லாமல் கடன் தள்ளுபடியை மாநில அரசுகள் அறிவிக்கக் கூடாது. அப்படியே அறிவித்தாலும் தள்ளுபடி செய்யப்பட்ட கடனுக்கான தொகையை அதிகபட்சம் 60 நாட்களுக்குள் முழுமையாக வங்கிகளுக்கு செலுத்திவிட வேண்டும்’ என்ற நிபந்தனைகளை கடந்த ஆண்டு நவம்பரில் அறிவித்தது நபார்டு.
இது தெரிந்திருந்ததால் தான், திமுக இம்முறை விவசாயக் கடன் தள்ளுபடி பக்கமே போகவில்லை. நபார்டின் லேட்டஸ்ட் நிலவரம் தெரியாமல் அதிமுக-வும் தவெக-வும் கடன் தள்ளுபடி அறிவிப்பை வாரி வழங்கின. அதிமுக ஆட்சிக்கு வராததால் தலை தப்பியது. ஆட்சியை பிடித்த தவெக, இந்த விஷயத்தில் ஆழம் தெரியாமல் ஆஃபர் கொடுத்துவிட்டோமோ என ஆழ்ந்து யோசித்துக்கொண்டிருக்கிறது.




