கிளிநொச்சியில் ஆட்டம் காட்டிய தனியார் பேருந்து சாரதிகள் சிலருக்கு தண்டம், பணித்தடை!

Date:

பொதுப் போக்குவரத்துச் சேவையின் போது சக பேருந்து சாரதிகளுடன் முரண்பட்டுத் தாக்குதல் நடத்தியமை, நேர ஒழுங்கைக் குழப்ப முற்பட்டமை மற்றும் உரிய பதிவுகளின்றிச் சேவையில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டுக்களுக்காக, தனியார் பேருந்து சாரதிகளுக்குப் பணித்தடை மற்றும் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற வெவ்வேறு சம்பவங்கள் தொடர்பில் போக்குவரத்து அதிகார சபையால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பரந்தன் – முறிகண்டி வழித்தடச் சேவையில் ஈடுபட்டிருந்த பேருந்து சாரதி ஒருவர், மற்றுமொரு பேருந்து சாரதியைத் தாக்கியுள்ளார். அத்துடன், புளியம்பொக்கணை கோவில் உற்சவத்தின் போது பேருந்துகளின் நேர ஒழுங்கைக் குழப்பும் வகையிலும் அவர் செயற்பட்டுள்ளார். இக்குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதையடுத்து, குறித்த சாரதிக்கு 5 நாட்கள் பணித்தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், இனிவரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது எனக் கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இராமநாதபுரம் – முழங்காவில் வழித்தடச் சேவையில் ஈடுபட்டிருந்த மற்றுமொரு சாரதி, வவுனியா – யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபட்டிருந்த பேருந்து சாரதியைக் கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் வைத்து அச்சுறுத்தியுள்ளார். இது தொடர்பிலான விசாரணைகளின் போது, குறித்த நபர் அதிகார சபையில் எவ்வித உத்தியோகபூர்வ பதிவுகளுமின்றிச் சாரதியாகக் கடமையில் ஈடுபட்டிருந்தமையும் கண்டறியப்பட்டது. இதற்கமைவாக, அவருக்கு 1,500 ரூபா தண்டப்பணமும் 3 நாட்கள் பணித்தடையும் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், போக்குவரத்து அதிகார சபையில் சாரதியாக முறையாகப் பதிவு செய்த பின்னரே அவர் தொடர்ந்தும் சேவையில் ஈடுபட அனுமதிக்கப்படுவார் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

பொதுமக்களுக்கான போக்குவரத்துச் சேவையைச் சீர்குலைக்கும் வகையிலோ, பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலோ அல்லது வன்முறையைத் தூண்டும் வகையிலோ செயற்படும் எந்தவொரு போக்குவரத்துச் சேவைப் பணியாளருக்கும் எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, பொதுப் போக்குவரத்தின்போது இவ்வாறான முறைகேடுகள் இடம்பெற்றால், பொதுமக்கள் தகுந்த ஆதாரங்களுடன் அதிகார சபையின் 071 9090900 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்கு உடனடியாகத் தெரியப்படுத்த முடியும் எனவும் அதிகார சபை பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.

spot_imgspot_img

More like this
Related

அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் முயற்சி

சமீப காலங்களில் மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான சில அரசியல்வாதிகள்...

நடிகை அம்பிகா ரூ.46 கோடி காசோலை மோசடி செய்ததாக தங்கை ராதா புகார்

சுமார் ரூ.46 கோடி பணத்தை காசோலை மூலமாக மோசடி செய்ததாக நடிகை...

சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளராக ஜாஹிர் கான் நியமனம்

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்