தமிழகத்தின் புதிய ஆட்சி அமைந்த சூழலில், விசிக தலைவர் திருமாவளவன் திடீரென டெல்லிக்கு சென்றுள்ள தகவல், தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் கே.சி. வேணுகோபாலை அவர் சந்திக்க உள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களை வென்ற ‘தவெக’ தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், பெரும்பான்மை இல்லாத காரணத்தால் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை பெற்றது. நீண்ட இழுபறிக்கு பிறகு விசிக தனது ஆதரவை வழங்கியது.
முன்னதாக நடந்த விசிக நிர்வாகிகள் கூட்டத்தில், “திமுக கூட்டணியில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை; எனவே, தவெக-விடம் துணை முதல்வர் பதவி மற்றும் காலியாகும் திருச்சி கிழக்கு தொகுதியைப் பெற வேண்டும்” என ஒரு தரப்பினர் அழுத்தம் கொடுத்தனர். ஆனால், “பாஜகவை முழுமையாக எதிர்க்காத தவெக-வுடன் கூட்டணி வைப்பது சரியாக இருக்காது” என மற்றொரு தரப்பினர் எச்சரித்தனர். இறுதியில், குடியரசுத் தலைவர் ஆட்சியைத் தவிர்க்கவே ஆதரவு என திருமாவளவன் அறிவித்தார்.
தற்போது அதிமுக-வில் பழனிசாமிக்கும், சி.வி.சண்முகம் தரப்புக்கும் இடையே மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, சி.வி. சண்முகம் தரப்பு 34 அதிமுக எம்எல்ஏ-க்களின் ஆதரவுக் கடிதத்தை தவெக-வுக்கு வழங்கத் தயாராகிவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
லீமாரோஸ் மார்ட்டின் மூலமாக ஆதவ் அர்ஜுனா ஏற்பாட்டில் சி.வி.சண்முகம் தரப்பு தவெக-வுடன் நெருங்குவது திருமாவளவனுக்குப் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை அதிமுக உள்ளே நுழைந்தால், விசிக வெளியேறுவது குறித்து அக்கட்சி ஆலோசித்து வருகிறது.
இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்குத் தனது கவலையைத் தெரிவிக்கவும், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலை விளக்கவுமே திருமாவளவன் டெல்லி சென்றுள்ளார். குறிப்பாக, திமுக-வுக்கு எதிரான அரசியலை காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தீவிரமாக முன்னெடுக்கக் கூடாது என அவர் வலியுறுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது. இன்று அல்லது நாளை நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பு, தமிழக அரசியலில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே நேற்று முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க வருமாறு 4 முறை அழைப்பு விடுத்தும் திருமாவளவன் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



