மட்டக்களப்பு தாந்தாமலை நெல்லிகாடு வயல் பிரதேசத்தில் பாழடைந்த கிணற்றில் உயிருடன் பெண் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மாவட்ட புலனாய்வுப் பிரிவின் தகவலுக்கமைய பொலிசார் 24 மணித்தியாலத்தில் குறித்த பெண்ணை கடத்தி மயக்க மருந்து கொடுத்து தங்க ஆபரணங்களை கொள்ளையடித்த காஞ்சிரம்குடா பகுதியைச் சேர்ந்த கணவன் மனைவி மற்றும் கணவனின் தம்பி உட்பட 3 பேரை நேற்று சனிக்கிழமை (21) இரவு வவுணதீவு பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாகவும் கிணற்றில் இருந்து சடலமாக மீட்ட பெண்ணையும் இதே பணியில் அவர்கள் கிணற்றில் வீசி கொலை செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
கடந்த வியாழக்கிழமை வவுணதீவு இருந்து மட்டக்களப்பு நகருக்கு இரண்டரை வயது குழந்தையுடன் சென்று காணாமல் போன இளம் தாயும் குழந்தையும், அடுத்த நாள் வெள்ளிக்கிழமை இளம் தாய் பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையிலும், அவரது குழந்தை வயல் பகுதியில் கைவிடப்பட்டு அழுது கொண்டிருந்த நிலையிலும் உயிருடன் மீட்கப்பட்டதுடன் கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது
இது தொடர்பாக மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித்த லீலாரத்தின தலைமையில் கொக்கட்டிச்சோலை, வவுணதீவு, ஆயித்தியமலை, வெல்லாவெளி, மட்டு தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் வி தீவிர விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் சிசிடிவி கமராவில் பதிவாகிய வீடியோ படங்களை பரீட்சித்த போது குறித்த இளம் தாயை ஏற்றி சென்ற முச்சக்கரவண்டி மற்றும் அவருடன் வந்த பெண் தொடர்பாக விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டன
இந்த நிலையில் மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு குறித்த பெண் மற்றும் முச்சக்கர வண்டி தொடர்பாக கிடைத்த தகவல் ஒன்றினை அடுத்து அதன் பொறுப்பதிகாரி தலைமையில் புலனாய்வு பிரிவினர் பொலிசாருடன் இணைந்து வந்தாறுமூலை ஆலையடி வீதியில் உள்ள வீடு ஒன்றை நேற்று சனிக்கிழமை இரவு 7.00 மணியளவில் சுற்றிவளைத்து முற்றுகையிட்டு அங்கு ஒளிந்திருந்த வவுணதீவு காஞ்சிரம்குடா வைச் சேர்ந்த 26 வயதுடைய சோமசுந்தரம் சர்லியாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதன்போது குறித்த பெண்ணின் கணவரான காஞ்சிரம்குடாவைச் சேர்ந்த 34 வயதுடைய வெற்றிவேல் சதீஸ்வரன், அவரது தம்பியான 22 வயதுடைய வெற்றிவேல் தனோஜன் ஆகிய இருவரையும் வவுணதீவில் வைத்து கைது செய்ததுடன் மறைத்து வைக்கப்பட்டிருந்த கடத்தலுக்கு பயன்படுத்திய முச்சக்கர வண்டியை மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்ட கணவன் மனைவி சம்பவ தினம் வியாழக்கிழமை வந்தாறுமூலையில் அவர்களது வீட்டில் இருந்து கொக்கட்டிச்சோலை பகுதிக்கு சென்று பின்னர் ஆயித்தியமலை பகுதி சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது வவுணதீவு பிரதேச செயலக காரியாலயத்துக்கு முன்னால் குழந்தையுடன் பஸ் வண்டிக்கு காத்திருந்த இளம் தாயை கண்டு முச்சக்கர வண்டியை நிறுத்தி எங்கே போவதாக கேட்டபோது அவர் மட்டு நகருக்கு போக போவதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த பெண் நாங்கள் அங்கு செல்வதாகவும் வருமாறு கோரினார் அதற்கு இளம் தாய் ஆட்டோவில் போக பணம் இல்லை என தெரிவித்த போது 100 ரூபாய் தந்தால் போதும் என தெரிவித்து இளம் தாயையும் குழந்தையையும் ஏற்றிக்கொண்டு நகரை நோக்கி பிரயாணிக்க போது ஈடு வைத்த குழந்தையின் தங்க ஆபரணத்தை மீளப் போவதாக தெரிவித்து கொண்ட நிலையில் நகரை வந்தடைந்து குழந்தையுடன் இளம் தாய் இறங்கியுள்ளார்.
இறங்கிய அந்த இளம் தாய்க்கு பின்னால் குறித்த பெண்ணும் தானும் வருவதாக தெரிவித்து பின் தொடர்ந்து சென்ற நிலையில் அங்கு அவர் ஈடு வைத்த தங்க ஆபரணத்தை மீட்டெடுத்துக் கொண்ட பின்னர் குறித்த பெண் தாங்கள் மீண்டும் வவுணதீவு போவதாகவும் உங்களுடன் இன்னொருவரை ஏற்றி குறைந்த கட்டணத்தில் கொண்டு சென்று விடுவதாக தெரிவித்து அவர்களை ஆட்டோவில் ஏற்றி கொண்டு வலையிறவு பாலத்தை அண்மித்த போது அவருக்கு மயக்க மருந்து கலந்து பழச்சாறு கொண்ட யூஸ் போத்தலை குடிப்பதற்கு கொடுத்த போது அவர் அதை வாங்கி குடித்துக் கொண்டதை அடுத்து மயக்கமடைய ஆரம்பித்துள்ளார்.
இதனை தொடர்ந்து குறித்த முச்சக்கரவண்டி வலையிறவு பாலத்தை கடந்து தாண்டியடி நோக்கி சென்ற நிலையில் அங்கு முச்சக்கர வண்டியை நிறுத்திய போது அதில் இருந்து குறித்த பெண் இறங்கிய நிலையில் அங்கு காத்திருந்த 22 வயதுடைய இளைஞன் முச்சக்கர வண்டியில் ஏறிக் கொண்டபோது மயக்கத்தில் இருந்த இளம் தாய் தன்னை இறக்கிவிடும் படி கோரிய நிலையில் முற்றாக மயக்கமடைந்துள்ளார்.
இதையடுத்து அவரது கழுத்தில் கிடந்த 5 பவுண் தாலிக் கொடி மற்றும் ஒரு பவுண் தங்க சங்கிலியை கழற்றி கொள்ளையடித்துக் கொண்டு குழந்தையை கொத்தியவலை வயல்பகுதில் வீசி எறிந்து விட்டு மயக்கமடைந்த இளம் தாயை தாந்தமலை பகுதியிலுள்ள நெல்லிகாடு வயல் பகுதிக்கு கொண்டு சென்று அங்கிருந்த பாழடைந்த கிணற்றில் தூக்கி வீசி விட்டு அங்கிருந்து தப்பி வீட்டிற்கு சென்றுள்ளதாகவும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க ஆபரணங்களை ஈடு வைத்து பணம் எடுத்துள்ளனர்.
அதேவேளை கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்ணையும் இதே பாணியில் யூசில் மயக்க மருந்து கொடுத்து மயங்க செய்து அவரின் தங்க ஆபரணங்களை கொள்ளையடித்து அந்த கிணற்றுக்குள் கொண்டு சென்று போட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில் கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அந்த பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.
-கனகராசா சரவணன்-




