மன்னார் மாவட்டத்தில் தமிழ் தரப்புக்கள் இணைந்து ஆட்சியமைக்க பிரகாசமான வாய்ப்புக்கள் இருந்தும்- ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அதற்கான கோரிக்கையை தொடர்ந்து விடுத்து வந்த போதும்- எகத்தாளமாக நடந்து கொண்ட இலங்கை தமிழ் அரசு கட்சி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்து விடலாமென்ற கனவுடன் களமிறங்கி, இன்று அடுத்தடுத்து மூக்குடைபட்டு வருகிறது.
மன்னார் பிரதேசசபையை தொடர்ந்து, மன்னார் நகரசபையிலும் தமிழரசு கட்சி வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர். இந்த இரண்டு சபைகளையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அணி கைப்பற்றியுள்ளது.
முன்னதாக இன்று மன்னார் பிரதேசசபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் தவிசாளராகவும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உறுப்பினர் உப தவிசாளராகவும் தெரிவாகியிருந்தனர்.
தற்போது, மன்னார் நகரசபையை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கைப்பற்றியுள்ளது. அதன் டானியல் வசந்தன் முதல்வராகவும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் உபதவிசாளராகவும் தெரிவாகினர்.
முன்னதாக, தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து ஆட்சியமைக்க மன்னார் தமிழரசு கட்சி பிரமுகர்கள் பேச்சு நடத்தி வந்தனர். எனினும், அதை எழுத்து வழி உடன்படிக்கையாக மேற்கொள்ள வேண்டுமென தேசிய மக்கள் சக்தி நேற்று இரவு திடீர் நிபந்தனை விதித்ததையடுத்து, அந்த முயற்சி தோல்வியடைந்தது.
இதேவேளை, தமிழரசு கட்சியின் மன்னார் பிரமுகர் சாள்ஸ் நிர்மலநாதனுக்கும், கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனுக்குமிடையில் பனிப்போர் நிலவியது. தமிழரசு கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்க விரும்பிய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அதற்கான முன்முயற்சியை மேற்கொண்ட போதும், சாள்ஸ் தரப்பில் அதை அங்கீகரிக்கவில்லையென்ற பலமான குற்றச்சாட்டு உள்ளது.
மன்னார் நகரசபையின் தவிசாளர் வேட்பாளரென கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனால் குறிப்பிடப்பட்டவரை, இன்று முன்மொழியவே கட்சிக்குள் ஆள் இருக்கவில்லை. ஏனைய தமிழரசு கட்சி உறுப்பினர்கள் ஒன்றிணைந்து, மான் சின்னத்தில் போட்டியிட்டவரை முன்மொழிந்தனர். அவர் வெற்றிபெறவில்லை. ஒரு தமிழரசு கட்சி உறுப்பினர் நடுநிலை வகித்தார்.




