சாவகச்சேரி பிரதேசசபையை திருவுளச்சீட்டு முறையில் இலங்கை தமிழ் அரசு கட்சி கைப்பற்றியுள்ளது.
இன்று (23) மதியம் நடந்த தவிசாளர் தெரிவில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளரும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் வேட்பாளரும் தலா 10 வாக்குகளை பெற்றிருந்தனர்.
பிரதேசசபை எல்லைக்கு வெளியில் வசிப்பதாக குறிப்பிட்டு, தமிழ் தேசிய பேரவையின் உறுப்பினர் ஒருவருக்கு இலங்கை தமிழ் அரசு கட்சியின் பின்னணியில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதனால் அவர் வாக்களிக்க இடைக்கால தடைவிதிக்கப்பட்டிருந்தது.
இதுதவிர, செல்வரத்தினம் ஆனந்தகுமார் என்ற தமிழ் தேசிய பேரவை உறுப்பினர் வாக்களிப்பில் பல்டியடித்து, நடுநிலை வகித்தார். அவர் நியமனப்பட்டியல் மூலம் தெரிவானவர். அவரை வட்டாரத்தில் தோற்கடித்தவரே, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தவிசாளர் வேட்பாளர். இதனால் எழுந்த பொறாமையுணர்வு உள்ளிட்ட காரணங்களினால் அவர் வாக்களிப்பில் நடுநிலை வகிக்கக்கூடும் என்ற கருத்து சில நாட்களாக நிலவியது. இதையடுத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் உள்ளிட்டவர்கள் அவருடன் தொலைபேசியில் உரையாடிய போதும், அவர் பல்டியடிக்கும் முடிவை மாற்றவில்லை.




