ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச் சந்தியில் வைத்து வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையில் ஏற்கனவே இடம்பெற்றிருந்த பிரச்சினை தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில் கடந்த 9ஆம் திகதி விசாரணைக்காக எடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் சாட்சியமளித்துவிட்டுத் திரும்பும்போதே குறித்த இளைஞர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் தலைமறைவான நிலையில் அவர்கள் வவுனியா நெடுங்கேணி பகுதியில் வைத்து யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாரால் நேற்றுக் கைது செய்யப்பட்டனர்.
குற்றச்செயலில் ஈடுபட்ட மூவர், குற்றச் செயலுக்குத் திட்டமிட்ட ஒருவர் என நால்வரே இவ்வாறாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் தற்போது மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
அவர்களை நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
சந்தேகநபர்களிடம் இருந்து இரண்டு வாள்கள், ஒரு கத்தி, ஓர் உள்ளூர்க் கைக்குண்டு மற்றும் இரண்டு மோட்டார்சைக்கிள்கள் என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.




