சீனா ஏவிய ரொக்கெட்டின் மிகப்பெரிய பாகம் ஒன்று பூமியின் மீது விழப் போவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
18 தொன் எடை கொண்ட இந்தப் பாகம் கடந்த பல தசாப்தங்களில் பூமி மீது கட்டுப்பாடில்லாமல் விழும் மிகப்பெரிய பொருளாகும்.
தனது விண்வெளி நிலையக் கட்டமைப்புக்காக கடந்த மாதத்தில் சீனா லோங் மார்ச் – 5பி என்ற ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது. இதன் பணி நிறைவடைந்து விட்டாலும், இந்த ரொக்கெட்டின் பாகம் இப்போது கட்டுப்பாடு இல்லாமல் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.
இந்தப் பாகம் பூமியை நோக்கி வரும் பாதையை உற்றுக் கவனித்துக் கொண்டிருப்பதாகவும் இப்போதைக்கு அதைச் சுட்டுத் தள்ளும் எந்தத் திட்டமும் இல்லை எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
“யாருக்கும் ஆபத்தில்லாத பகுதியில் ரொக்கெட்டின் பாகம் விழும் என நம்புகிறோம். கடலிலோ அல்லது அதைப் போன்ற வேறு இடத்திலோ விழக்கூடும்” என்று அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் லொய்ட் ஒஸ்டின் தெரிவித்தார்.
கிரீன்விச் நேரப்படி சனிக்கிழமை இரவிலோ ஞாயிற்றுக்கிழமை காலையிலோ ரொக்கெட் பாகம் பூமியின் காற்று மண்டலத்துக்குள் நுழையும் என பல நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள். ஆயினும் இந்தக் கணிப்புகள் அனைத்தும் உறுதியானவை அல்ல.
பூமியைச் சுற்றி 160 கிலோ மீட்டர் சிற்றச்சு நீளமும் 375 கிலோ மீட்டர் நெட்டச்சு நீளமும் கொண்ட நீள்வட்டப் பாதையில் கடந்த ஏப்ரல் 29 ஆம் திகதி லோங் மார்ச் – 5பி ரொக்கெட் செலுத்தப்பட்டது. ரொக்கெட்டின் முக்கிய பகுதி மட்டும் அந்த வட்டப் பாதையில் கொண்டு சேர்க்கப்பட்டது. அப்போதிருந்தே பூமியில் இருந்து ரொக்கெட்டின் பாகம் இருக்கும் தொலைவு குறைந்து கொண்டே வந்திருக்கிறது.
பூமிக்கும் ரொக்கெட்டின் பாகத்துக்குமான தொலைவு குறைவதற்கு அங்கிருக்கும் காற்றின் அடர்த்தி உள்ளிட்ட காரணங்கள் இருக்கக்கூடும். ஆயினும் அவை பற்றிய போதுமான தகவல்கள் இல்லை.

விண்ணில் இருந்து பூமியின் காற்று மண்டலத்துக்குள் நுழையும்போது பெரும்பாலான பொருள்கள் எரிந்து சாம்பலாகிவிடும். ஆனால் ரொக்கெட்டின் பாகம் அதிக உருகுநிலை கொண்ட உலோகங்களால் செய்யப்பட்டது என்பதால், காற்று மண்டலத்தைக் கடந்து வரக்கூடிய ஆபத்தும் உள்ளது.
ஓராண்டுக்கு முன்பு இதேபோன்ற சீன ரொக்கெட்டின் முக்கிய பாகம் பூமியை நோக்கி வந்தபோது, அதில் இருந்ததாகக் கருப்படும் ஒரு குழாய் ஆபிரிக்காவின் ஐவரி கோஸ்ட் நாட்டில் கிடைத்தது.
விண்வெளியில் இருந்து வரும் ஒரு பொருள் பூமியில் வாழும் மனிதர்கள் மீது விழுவதற்கான சாத்தியக்கூறு மிக மிகக் குறைவு. ஏனெனில் பூமியில் பெரும்பகுதி கடல். நிலப் பகுதியிலும் மக்கள் இல்லாத பகுதி அதிகம்.
ரொக்கெட்டின் பாகம் பூமத்திய ரேகையில் இருந்து 41.5 டிகிரி சாய்வாக நகர்ந்து வருவதாகக் கணிக்கப்பட்டுள்ளது. அதனால் பூமியின் தெற்கு அட்சரேகைக்கு 41.5 டிகிரிக்கு தெற்கேயும், வடக்கு அட்ச ரேகைக்கு 41.5 டிகிரிக்கு வடக்கேயும் எந்தப் பாதிப்பும் இல்லை. இதற்கு இடைப்பட்ட பகுதியில்தான் அந்தப் பாகம் விழ வேண்டும்.
இவ்வளவு பெரிய பாகம் பூமியில் கட்டுப்பாடில்லாமல் விழ நேர்ந்ததற்கு அலட்சியமே காரணம் என்ற கூற்றை சீனா விமர்சிக்கிறது. பூமியில் விழுந்து ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற மேற்கு நாடுகளின் எச்சரிக்கையை “மிகைப்படுத்தப்பட்டது” என்று கூறும் சீனாவின் அரசு இதழ், அது கடலில் எங்கேயாவது விழும் என்று கணித்திருக்கிறது.
எந்தப் பாதிப்பும் ஏற்படாதிருக்கும் வகையில் சீனாவின் விண்வெளிக் கண்காணிப்பகம் உற்று நோக்கி வருவதாக விண்வெளி நிபுணர் சோங் ஷோங்பிங் கூறியதாக தி குளோபல் டைம்ஸ் இதழ் குறிப்பிட்டுள்ளது.
பெருகும் விண்வெளிக் குப்பைகள்
கடந்த 60 ஆண்டுகளில் ஏராளமான ராக்கெட்டுகளும் விண்கலன்களும் விண்வெளியில் பெருங் குப்பையை உருவாக்கியிருக்கின்றன என பிரிட்டனின் சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் ஹுயு லீவிஸ் கூறுகிறார். இதற்கு பல நாடுகளும் காரணம் என்றாலும் ரஷ்யாவும் அமெரிக்காவும்தான் முக்கியக் காரணம்.
தற்கால நடைமுறைகளின்படி ஒரு விண்வெளித் திட்டத்தில் பயன்படுத்தப்படும் ராக்கெட்டுகள் அவற்றின் வேலை முடிந்தவுடன் வேறொரு சுற்றுப்பாதைக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும். பெரிய பாகங்கள் எனில் அவை கட்டுப்படுத்தப்பட்ட வகையில் கடலில் விழ வைக்கப்படும். பெரும்பாலும் அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் தென்மெரிக்காவுக்கு இடைப்பட்ட பசிபிக் கடல் பகுதி இதற்குத் தேர்வு செய்யப்படுகிறது.
சுமார் 1,500 சதுர கிலோ மீட்டருக்கும் அதிகமான கடல் பரப்பு ரொக்கெட்டுகள் மற்றும் விண்வெளிக் குப்பைகள் புதைக்கப்படும் இடமாக மாறிவிட்டது. இங்கு சுமார் 260 விண்வெளித்திட்டங்களில் பயன்பட்ட விண்வெளிக் குப்பைகள் கிடக்கலாம் எனக் கருதப்படுகிறது.
UPDATE: Chinese Long March 5B (NORAD-ID 48275) is expected to re-enter this week – NORSS' Monte Carlo results provide a probabilistic re-entry time of approximately 0248UTC on 09/05/2021. The 2 sigma uncertainty window currently spans 595 minutes. pic.twitter.com/I5jsRWsW6F
— NORSS Orbital Analyst Hive (@HiveNorss) May 7, 2021




